ஆலங்காயம் அருகே புதிதாக டாஸ்மாக் கடை திறக்க கூடாது, கிராம மக்கள், கலெக்டரிடம் மனு


ஆலங்காயம் அருகே புதிதாக டாஸ்மாக் கடை திறக்க கூடாது,  கிராம மக்கள், கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 13 Aug 2018 11:58 PM GMT (Updated: 13 Aug 2018 11:58 PM GMT)

ஆலங்காயம் அருகே உள்ள பெத்தூர் கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க கூடாது என கிராம மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டர் ராமனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

வேலூர்,

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி கொடுத்தனர்.

அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கூறினார். முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு, பட்டா மாறுதல் என 384 மனுக்கள் பெறப்பட்டன.

ராணிப்பேட்டை பெல் பகுதியை சேர்ந்தவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், பெல் நிறுவனத்துக்கு நிலம் கொடுத்தவர்களில் 7 குடும்பங்களை சேர்ந்த வாரிசுதாரர்களுக்கு இதுவரை வேலை வழங்கவில்லை. கடந்த 37 ஆண்டுகளாக பெல் நிறுவனத்தில் வேலை கேட்டு போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் பெல் நிறுவனம் வேலை வழங்க மறுக்கிறது. எங்களுக்கு வேலை வழங்க வேண்டும். இல்லையென்றால் எங்கள் நிலத்தை மீண்டும் எங்களிடமே பெல் நிறுவனம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சி வேலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் சத்தியநாராயணன், சுரேஷ், அப்துல்ஹரீம், ராஜா ஆகியோர் கலெக்டரிடம் அளித்த மனுவில், சுதந்திர தினத்தன்று மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும். கிராமசபை கூட்டம் முறையாக அனைத்து இடங்களிலும் நடத்தப்படுவதை கலெக்டர் உறுதி செய்ய வேண்டும். இதுவரை நடந்த வரவு, செலவு, தணிக்கை மற்றும் திட்ட அறிக்கையை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

காட்பாடியை அடுத்த பிரம்மபுரத்தை சேர்ந்த சிலர் அளித்த மனுவில், பிரம்மபுரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் 2 கட்டமாக தேர்தல் நடந்தது. சங்க செயலாளராக கரிகாலன் உள்ளார். தற்போது அவரது உறவினரே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் அங்கு பணிபுரியும் 3 பேரும் அவரது உறவினர்களே. இதுகுறித்து கூட்டுறவு துணை பதிவாளரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பிரம்மபுரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பணிபுரியும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

வாணியம்பாடி தாலுகா ஆலங்காயத்தை அடுத்த பெத்தூர் கிராம மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் கோவில்கள் உள்ள இடத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட உள்ளது. டாஸ்மாக் கடை திறந்தால் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மதுபாட்டில்கள், காலி குடிநீர் பாக்கெட்டுகளை வீசுவார்கள். அதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். எனவே புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதை கைவிட வேண்டும். இதுதொடர்பாக கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

குடியாத்தத்தை சேர்ந்த இஸ்மாயில், சம்பத் ஆகியோர் அளித்த மனுவில், குடியாத்தம் நகர கூட்டுறவு வங்கி நிர்வாகக்குழு உறுப்பினர்களாக பதிவு செய்தவர்களின் வேட்பு மனு பரிசீலனையில் முறைகேடு நடந்துள்ளது. எனவே, நகர கூட்டுறவு வங்கி தேர்தலை ரத்துசெய்து நேர்மையாக நடத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் ராமன், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் சண்முகநாதன் (பொது), மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் கஜேந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெயபிரகாஷ், தனித்துணை கலெக்டர் பேபி இந்திரா (சமூக பாதுகாப்பு), மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, கலெக்டர் அலுவலக மேலாளர் முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story