வானவில் : காபி பிரியர்களுக்கு கை கொடுக்கும் மினி பிரஸ்ஸோ காபி மேக்கர்


வானவில் : காபி பிரியர்களுக்கு கை கொடுக்கும் மினி பிரஸ்ஸோ காபி மேக்கர்
x
தினத்தந்தி 15 Aug 2018 10:33 AM IST (Updated: 15 Aug 2018 10:33 AM IST)
t-max-icont-min-icon

காலையில் எழுந்தவுடன் காபி குடிக்கவில்லை என்றால் அன்றைய பொழுது பலருக்கு சிறப்பாக அமையாது என்ற நிலை.

குறிப்பிட்ட பிராண்டு, குறிப்பிட்ட காபிதூள், பில்டர் காபி என பலரையும் பல வகைகளில் கட்டிப்போட்டிருக்கிறது காபி.

இப்போதெல்லாம் நெடுஞ்சாலைகளில் ‘கும்பகோணம் டிகிரி காபி கிடைக்கும்’ என்ற போர்டையும், அதைப் பார்த்து நிறுத்தி காபி குடித்துவிட்டுசெல்லும் கார்களையும் நாம் பரவலாக பார்க்கலாம்.

எவ்வளவுதான் இன்ஸ்டன்ட் காபி வந்தாலும், பில்டர் காபிக்கு ஈடு இணை இல்லை என்றே சொல்லலாம். உலகம் முழுவதும் இதுதான் நிலை.

ஐரோப்பியர்களைப் பொறுத்தமட்டில் ‘பிளாக் காபி’ மிகவும் பிரசித்தம். டாடா நிறுவனம் அமைத்துள்ள ஸ்டார் பக்ஸ் நிறுவனத்திற்குச் சென்றாலும் ‘பிளாக் காபி’ கிடைக்கும்.

காபி பிரியர்களின் ரசனைகளை ஈடு செய்யும் வகையில் நவீன கண்டுபிடிப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதில் இப்போது வந்துள்ளதுதான் ‘மினி பிரஸ்ஸோ காபி மேக்கர்’. வெளியூர் பயணம் செய்வோர் இதை எடுத்துச் செல்லலாம். இது எடை குறைவானது. இதைக் கையாள்வதும் எளிது.

முதலில் இதில் உங்களுக்குப் பிரியமான காபி தூளை இட்டு நிரப்பவும். இதை சமமாக பரவிவிட்டு பிறகு கொதிக்கும் தண்ணீரை ஊற்றி மூடி விடவும். உங்களுக்கு தேவைப்படும் சமயத்தில் இதில் உள்ள பிஸ்டன் மூலம் அதிக விசையுடன் காபி கோப்பையில் அழுத்தும்போது சுவை மிகுந்த எக்ஸ்பிரஸ்ஸோ காபி கிடைக்கும்.

மலையேற்றம் உள்ளிட்ட சாகசப் பயணம் மேற்கொள்வோருக்கு மிகவும் ஏற்றது இது. ஏனெனில் இதை இயக்க மின்சாரம் தேவையில்லை என்பது இதன் சாதக அம்சம். அமெரிக்காவில் மட்டும் தற்போது அமேசான் மூலம் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை 49 டாலர். விரைவிலேயே இந்தியாவுக்கும் இது விற்பனைக்கு வர உள்ளது. 

Next Story