மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடல் இறக்கத்துக்கு நவீன அறுவை சிகிச்சை அரசு டாக்டர்கள் சாதனை


மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடல் இறக்கத்துக்கு நவீன அறுவை சிகிச்சை அரசு டாக்டர்கள் சாதனை
x
தினத்தந்தி 17 Aug 2018 10:45 PM GMT (Updated: 17 Aug 2018 7:25 PM GMT)

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடல் இறக்கத்துக்கு அதிநவீன அறுவை சிகிச்சை செய்து அரசு டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சென்னை,

சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி கடந்த 3 வருடங்களாக மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டு இருந்தார். பல தனியார் மருத்துவமனைகளில் அவருக்கு சிகிச்சை அளித்தும் சிறுமியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதையடுத்து அவரது பெற்றோர் சிறுமியை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததால் சிறுமிக்கு டாக்டர்கள் மயக்க மருந்து கொடுத்து பரிசோதித்தனர். அப்போது சிறுமிக்கு குடல் இறக்கம் இருப்பதை பெருங்குடல் உள்நோக்கி கருவி மூலம் கண்டறிந்தனர்.

இதையடுத்து அந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் வசந்தாமணி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை இயக்குனர் டாக்டர் கண்ணன் மற்றும் இறப்பை குடல் அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் ஆனந்த் தலைமையிலான டாக்டர் குழுவினர் கடந்த 6-ந்தேதி சிறுமிக்கு நவீன அறுவை சிகிச்சை செய்தனர்.

நுண்துளை முறையில் அதிநவீன அறுவை சிகிச்சையை மருத்துவகுழு 3 மணி நேரம் மேற்கொண்டது. இதுகுறித்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் வசந்தாமணி கூறியதாவது:-

ரூ.3 லட்சம் ஆகியிருக்கும்

சிறுமி மலச்சிக்கல் மற்றும் ஆசனவாயில் ரத்தப்போக்கால் பாதிக்கப்பட்டு இருந்தார். ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால் புற்றுநோய் இருக்கலாம் என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. புற்றுநோய் இல்லை என்று உறுதி செய்யப்பட்டவுடன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்து வலை வைத்து குடல் இறக்கம் சரிசெய்யப்பட்டுள்ளது. தற்போது சிறுமி நலமாக உள்ளார். இந்த அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனையில் செய்ய ரூ.3 லட்சம் வரை செலவாகும். ஆனால் முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இங்கு இலவசமாக செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story