விவசாயிகளுக்கு நிவாரணம்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர அடுக்குமாடி குடியிருப்பு - எடப்பாடி பழனிசாமி தகவல்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர அடுக்குமாடி குடியிருப்பு கட்டவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் காவிரி மற்றும் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். பவானியில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
பவானி மற்றும் காவிரி ஆற்றில் ஏற்பட்டு உள்ள வெள்ளப்பெருக்கால் ஈரோடு மாவட்டத்தில் சுமார் 50 கிராமங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து 2 ஆயிரத்து 335 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 375 ஆண்கள், 3 ஆயிரத்து 133 பெண்கள், 1,324 சிறுவர்–சிறுமிகள் என 7 ஆயிரத்து 832 பேர் மீட்கப்பட்டு 67 முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டு இருக்கிறது. முகாமில் தங்கி இருக்கும் அனைவருக்கும் தேவையான மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்றன. குழந்தைகளுக்கு தேவையான பால், ரொட்டி உள்ளிட்ட உணவுப்பொருட்கள் வழங்கப்படுகின்றன. பெண்களுக்கு தேவையான சானிட்டரி நாப்கின்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
முகாமில் தங்கி இருக்கும் பொதுமக்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தடையில்லாத மின்சாரம் மற்றும் ஜெனரேட்டர் வசதியும் செய்யப்பட்டு இருக்கிறது. கழிப்பிட வசதிகள் முழுமையாக செய்யப்பட்டு உள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்ட மொத்த வீடுகள் 1,976 ஆகும். இதில் 114 வீடுகள் பாதி அளவுக்கு சேதம் அடைந்தும், 263 வீடுகள் முழுவதும் சேதம் அடைந்தும் உள்ளன. 1,599 வீடுகளில் தண்ணீர் புகுந்தும், தண்ணீர் சூழ்ந்தும் உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கால் 47 கிராமங்களில் விவசாய நிலங்களில் வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. இதனால் 806 விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட விவசாய நிலம் 609.69 ஹெக்டேராகும். இதில் வேளாண்துறை கணக்கீட்டின் கீழ் 205.65 ஹெக்டேரும், தோட்டக்கலைத்துறை கணக்கீட்டின் கீழ் 404.04 ஹெக்டேரும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால், வெள்ளம் வடிந்ததும் முழுமையாக கிராமங்களுக்கு அதிகாரிகள் நேரில் சென்று கணக்கீடு செய்து, பின்னர் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்.
இன்று (அதாவது நேற்று) காலை நிலவரப்படி வினாடிக்கு 21 ஆயிரம் கன அடி தண்ணீர் பவானிசாகர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது. ஆற்றுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 95 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. காவிரி ஆற்றுக்கு வினாடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
பவானியில் பொதுமக்களை சந்தித்தபோது அவர்கள் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர்.
பவானி நகரை பொறுத்தவரை பவானி மற்றும் காவிரி ஆறுகள் சேரும் இடமாக உள்ளது. இங்கு பவானி ஆறு மற்றும் காவிரி ஆற்றங்கரைகளில் மக்கள் வசித்து வருகிறார்கள். தற்போது 2 ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். வெள்ளப்பெருக்கு காலங்களில் கரையோர வீடுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் அவர்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அவர்களின் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்து அவர்களுக்கு, பாதுகாப்பான இடத்தில் நிரந்தர அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்கும்.
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது புதியது அல்ல. நான் சிறுவனாக இருக்கும்போதே பவானியைப்பற்றி தெரியும். இங்கு உள்ள பள்ளிக்கூடத்தில்தான் 6–ம் வகுப்பு முதல் 11–ம் வகுப்புவரை படித்தேன். அதற்கு மேல் பட்டப்படிப்பையும் பவானியில் தங்கி இருந்துதான் படித்தேன். எனவே இங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் எப்படி தண்ணீர் புகுந்து மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது தெரியும்.
ஆகாயத்தாமரை அதிக அளவில் இருந்ததினால் வெள்ளப்பெருக்கு ஏற்படவில்லை. நாம் எதிர்பாராத வகையில் தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்ததால் அணைகள் நிரம்பி முழு கொள்ளளவு எட்டப்பட்டு உபரிநீர் திறக்கப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இதனால்தான் கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்து மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து கொடுத்து வருகிறோம்.
இவ்வாறு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். பேட்டியின் போது அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், தங்கமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.