ஜம்பை கலுங்கு பாலம் பகுதியில் சாலையில் விரிசல்
பவானி அருகே ஜம்பை கலுங்கு பாலம் பகுதியில் சாலையில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
ஈரோடு,
பவானி ஆற்றில் கடந்த வாரம் தண்ணீர் அதிகமாக சென்றதால் ஜம்பை பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அந்த பகுதியில் இருந்த தோட்டங்கள், வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. 2, 3 நாட்களுக்கு மேலாக அந்த பகுதியில் வெள்ளம் தேங்கி இருந்தது. தற்போது நீர் முற்றிலுமாக வடிந்து நிலம் காய்ந்து உள்ளது.
இந்தநிலையில் ஆப்பக்கூடல் செல்லும் நெடுஞ்சாலை பகுதியில் ஜம்பை கலுங்கு பாலத்தையொட்டி உள்ள ரோட்டில் திடீர் விரிசல் ஏற்பட்டு வெடிப்பாக மாறி இருக்கிறது. இதனால் அந்த பகுதியில் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் கூறியதாவது:-
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்கு ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டது. கலுங்கு பாலமும் விரிவுபடுத்தப்பட்டது. சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் புதிதாக மண் கொண்டு வந்து கொட்டப்பட்டது. ஆனால் கீழ் பகுதியில் எந்தவிதமான கட்டுமானமும் செய்யப்படாமல் மண் கொட்டப்பட்டு இருந்தது. தற்போது பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இந்த பகுதி முழுமையாக தண்ணீரில் மூழ்கியது. இதனால் கீழ்ப்பகுதியிலிருந்து மண்சரிவு ஏற்பட்டது. மேலும், சாலையில் விரிசல் கண்டது. அது கொஞ்சம் கொஞ்சமாக வெடிப்பாக மாறி விட்டது. இந்தநிலையில் கனரக வாகனங்கள் இந்த ரோட்டில் சென்றால் மீண்டும் உடைப்பு பெரிதாகி விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, “வெள்ளப்பெருக்கிற்கு பின்னர் எங்கள் பகுதியில் குடிநீர் வினியோகம் இல்லை. அதை உடனடியாக சரி செய்து தர வேண்டும்” என்றார். ரோட்டின் 2 பக்கங்களிலும் வெடிப்பு ஏற்பட்டு உள்ளது. பெரும் விபத்து ஏற்படும் முன் அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
Related Tags :
Next Story