கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி


கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி
x
தினத்தந்தி 25 Aug 2018 3:20 AM IST (Updated: 25 Aug 2018 3:20 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது என கலெக்டர் கணேஷ் கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்படுவது குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி வருகிற 1-ந்தேதி தொடங்கி 21-ந் தேதி வரை நடக்கிறது. காய்ச்சல், தீவனம் தின்னாமை, வாயில் இருந்து நுரையுடன் எச்சில் ஒழுகுதல், கால் குளம்புகள், வாய், உதடு, நாக்கு மற்றும் மடிப்பகுதி ஆகிய இ்டங்களில் கொப்புளம் உண்டாகி, புண் ஏற்பட்டு தோல் உரிதல் போன்றவை கோமாரி நோயின் அறிகுறிகள் ஆகும்.

இந்த நோய் ஏற்படும் இளங்கன்றுகளில் இறப்பு நேரிடும். கறவை மாடுகளில் பால் குறையும், சினை பிடிக்கும் திறன் குறையும் மற்றும் சினை பசுக்களில் கருச்சிதைவு ஏற்படும். எருதுகளில் வேலைத்திறன் குறையும். கோமாரி நோயுற்ற கால்நடைகளை தனியே பிரித்து வைத்து பராமரிக்க வேண்டும். தடுப்பூசி போடுவது ஒன்றே இந்நோயில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பதற்கான வழியாகும்.

கால்நடைகளில் கோமாரி பாதிப்பு ஏற்பட்டவுடன் அருகே உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி சிகிச்சை அளிக்க வேண்டும். கால்நடை வளர்ப்போர், கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும் இடத்திற்கு தங்களது கால்நடைகளை தவறாமல் கொண்டு சென்று தடுப்பூசி போட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பன்னீர்செல்வம் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story