மதுரை மத்திய சிறையில் இருந்து 30 கைதிகள் விடுதலை

மதுரை மத்திய சிறையில் இருந்து 30 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
மதுரை,
தமிழகம் முழுவதும் சிறைச்சாலைகளில் உள்ள உணர்ச்சி வசப்பட்டு, எதிர்பாராத விதமாக மற்றும் தங்களை பாதுகாத்துக்கொள்ள கொலை குற்றத்தில் ஈடுபட்டு 10 வருடத்திற்கு மேல் சிறைதண்டனை அனுபவித்த 1,763 கைதிகளை எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு கட்டங்களாக விடுதலை செய்ய அரசு அறிவித்தது. அதன்படி மதுரை மத்திய சிறைச்சாலையில் இருந்து மூன்று கட்டமாக 32 கைதிகள் விடுதலைசெய்யப்பட்டு உள்ளனர்.
நேற்று நான்காம் கட்டமாக மதுரை மத்திய சிறைச்சாலையில் இருந்து 30 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் தங்கள் உடைமைகளுடன் சந்தோசமாக வெளியே வந்தனர். முன்னதாக சிறைத்துறை அதிகாரிகள் அவர்களுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். பல வருடங்களாக சிறையில் இருந்த அவர்களை வரவேற்பதற்காக அவர்களுடைய குடும்பத்தினர் சிறைச்சாலை முன்பு காத்திருந்தனர். வெளியே வந்தவர்களை பார்த்தவுடன் அவர்கள் ஆனந்த கண்ணீர் விட்டு கட்டித்தழுவி தங்களுடைய அன்பை வெளிப்படுத்தினர்.
மதுரை மத்திய சிறையில் இருந்து விடுதலை ஆகி வெளியே வந்த மதுரையை சேர்ந்த கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழகத்தில் 10 வருடத்துக்கும் மேலாக சிறையில் இருக்கும் 1,763 பேர் விடுவிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு இருக்கும் நிலையில் பிப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரை 450 பேர் தான் விடுவிக்கப்பட்டுஉள்ளனர் என்பது வேதனை அளிக்கிறது. 10 வருடத்திற்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் அனைவரையும் பாரபட்சமின்றி விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தகுதி இருந்தும் விடுதலை செய்யப்படாமல் இருக்கும் சிறைவாசிகள் சிறைக்குள் மிகுந்த மன வேதனையில் உள்ளனர்.
பிப்ரவரி மாதத்திற்கு பின்னர் மட்டும் 50–க்கும் மேற்பட்ட கைதிகள் மன உளைச்சலால் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.