காரைக்குடியில் இருந்து மதுரைக்கு கூடுதல் இடைநில்லா பஸ்கள் இயக்க வேண்டும், தொழில் வணிக கழகம் கோரிக்கை

காரைக்குடியில் இருந்து மதுரைக்கு கூடுதல் இடைநில்லா பஸ்கள் இயக்க வேண்டும் என்று தொழில் வணிக கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
காரைக்குடி,
காரைக்குடி தொழில் வணிக கழகத்தின் செயற்குழு கூட்டம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நடைபெற்றது. கழகத்தின் தலைவர் சாமி.திராவிடமணி கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் காசிவிஸ்வநாதன், ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் வெங்கடாசலம் வரவேற்று பேசினார். துணைச் செயாளர்கள் கந்தசாமி, சையது, வைரவன், கண்ணப்பன் உள்பட 50–க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் முன்னாள் முதல்–அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காரைக்குடியில் இருந்து மதுரைக்கு கூடுதலாக இடைநில்லா பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டுக்கல், பரமக்குடி, மதுரை, ராமேசுவரம் பகுதிகளுக்கு செல்லும் பஸ்களை, பழைய பஸ் நிலையத்தில் இருந்து இயக்க அரசு போக்குவரத்துக்கழகமும், தனியார் பஸ் நிறுவனங்கள் முன்வர வேண்டும். காரைக்குடி நகராட்சியில் சொத்து வரி, கடை வாடகை உயர்வு செய்துள்ளதை அரசு மறுபரிசீலனை செய்து குறைத்திட வேண்டும். மேலும் நகரில் வாகன போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் திரியும் ஆடு, மாடு, நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்குடியில் இருந்து மேலூருக்கும், திண்டுக்கல்லுக்கும் நெடுஞ்சாலை துறை சார்பில் நான்கு வழிச் சாலை அமைக்க இருப்பதற்கு மத்திய–மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் திருப்பதி, மருத்துவ முறைகள் குறித்தும், இருதய நோய் வராமல் இருக்க முன்எச்சரிக்கைகளை கையாள்வது குறித்தும் விளக்கி பேசினார். முடிவில் கழகத்தின் பொருளாளர் அழகப்பன் நன்றி கூறினார்.