திருவள்ளூர் அருகே இருவேறு விபத்துகளில் 2 பேர் சாவு

திருவள்ளூர் அருகே இருவேறு விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கத்தை சேர்ந்தவர் லட்சுமிபதி (வயது 52). இவர் திருப்பாச்சூரில் டீக்கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு லட்சுமிபதி வழக்கம் போல் வேலையை முடித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தன்னுடைய வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவர் திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் துாக்கி வீசப்பட்ட லட்சுமிபதி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு விபத்து
திருவள்ளூரை அடுத்த பெரிய ஓபுலாபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் தமிழ்வாணன்(20). இவர் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான நிஷாந்த்குமார்(20) என்பவருடன் தனது உறவினர் இல்ல திருமணத்திற்காக மோட்டார் சைக்கிளில் திருத்தணி நோக்கி சென்றார். பின்னர் அவர்கள் மீண்டும் அங்கிருந்து தங்கள் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் திருவள்ளூரை அடுத்த பட்டரைபெரும்புதூர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது திருவள்ளூரில் இருந்து திருத்தணி நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது தலையில் பலத்த காயம் அடைந்த தமிழ்வாணன் சம்பவ இடத்லேயே பரிதாபமாக இறந்து போனார். காயம் அடைந்த நிஷாந்த்குமாரை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story