மாணவர்களுக்கு மனிதநேயத்தை கற்றுத்தர வேண்டும்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேச்சு

மாணவர்களுக்கு மனிதநேயத்தை கற்றுத்தர வேண்டும் என்று ஜூனியர் ரெட் கிராஸ் ஆலோசகர்களுக்கான கருத்தரங்கில் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் பேசினார்.
காட்பாடி,
வேலூர் மாவட்டத்தில் வேலூர், திருப்பத்தூர், அரக்கோணம், வாணியம்பாடி, ராணிப்பேட்டை ஆகிய 5 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் உள்ள ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பின் பள்ளி ஆலோசகர்களுக்கான ஒருநாள் கருத்தரங்கம் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
கல்வி மாவட்ட அலுவலர்கள் புவேந்திரன், மணிவண்ணன், குணசேகரன், சாம்பசிவம், தலைமை ஆசிரியர் நரேந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பத்தூர் கல்வி மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்றார். வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தலைமை தாங்கி, கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
பள்ளி மாணவர்களுக்கு நீங்கள் மனித நேயத்தை கற்றுத்தர வேண்டும். அவர்களை மனித நேயம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுத்தலாம். தொண்டு நிறுவனங்கள், பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து செயல்படலாம். கேரள வெள்ள நிவாரணத்தில் ஜூனியர் ரெட் கிராஸ் தன்னார்வலர்களின் சேவை பாராட்டுக்குரியது. காவல்துறை, போக்குவரத்துத்துறையுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள 25 மாணவர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழலாம். பெருந்தலைவர் காமராஜர் விருதுக்கு மாணவர்களை நீங்கள் ஊக்குவிக்கலாம். அரசு ஆணைகளை படித்து மாணவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
வேலூர் கல்வி மாவட்ட பொருளாளர் மனோகரன், இணை அமைப்பாளர் கிருபானந்தம், திருப்பத்தூர் கல்வி மாவட்ட பொருளாளர் ஆனந்தன் ஆகியோர் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு, போக்குவரத்து விதிகள், சுகாதாரம், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள், பேரிடர் மேலாண்மை உள்பட பல்வேறு தலைப்புகளில் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்து பயிற்சி அளித்தனர். முடிவில் வேலூர் கல்வி மாவட்ட அமைப்பாளர் முருகேசன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story