மதுக்கடைக்கு எதிராக போராட்டம்: கட்டிடத்தை பெண்கள் இடிக்க முயற்சி திருபுவனத்தில் பரபரப்பு


மதுக்கடைக்கு எதிராக போராட்டம்: கட்டிடத்தை பெண்கள் இடிக்க முயற்சி திருபுவனத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 2 Sept 2018 4:30 AM IST (Updated: 1 Sept 2018 10:49 PM IST)
t-max-icont-min-icon

திருபுவனத்தில் மதுக்கடைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மதுக்கடை அமைய உள்ளதாக கூறப்பட்ட கட்டிடத்தை இடிக்க பெண்கள் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவிடைமருதூர்,


தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் மெயின் சாலையில் இயங்கி வந்த மதுக்கடை கோர்ட்டு உத்தரவின்பேரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து மதுக்கடையை வேறு இடத்தில் திறக்க டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர்.

இந்த நிலையில் திருபுவனம் தென்றல்நகர் சாய்பாபா கோவில் அருகே சபாபதி என்பவர் புதிதாக கட்டி வரும் கட்டிடத்தில் அதிகாரிகள் மதுக்கடை அமைக்க இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று அந்த கட்டிடத்தின் முன்பாக திரண்டு மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


போராட்டத்தின்போது பெண்கள் சிலர் கடப்பாரையை கொண்டு கட்டிடத்தை இடிக்க முயன்றனர். மேலும் கட்டுமான பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த சாரமும் அகற்றப்பட்டது.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அங்கு வந்த கட்டிட உரிமையாளர் சபாபதியை சுற்றி வளைத்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊர்வலமாக திருவிடைமருதூர் தாசில்தார் அலுவலகத்துக்கு மனு அளிக்க சென்றனர். அப்போது அங்கு தாசில்தார் இல்லை.


இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் மற்றும் தாசில்தார் அலுவலக ஊழியர்கள், பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

இதனிடையே தாசில்தார் அலுவலக தலைமை எழுத்தர் மனோரஞ்சிதத்திடம், திருபுவனம் தென்றல்நகரில் மதுக்கடை திறக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Next Story