ஏரி சங்கங்களுக்கு பணம் பட்டுவாடா செய்து வாய்க்காலை தூர்வார வேண்டும் - கவர்னர் கிரண்பெடி உத்தரவு


ஏரி சங்கங்களுக்கு பணம் பட்டுவாடா செய்து வாய்க்காலை தூர்வார வேண்டும் - கவர்னர் கிரண்பெடி உத்தரவு
x
தினத்தந்தி 3 Sept 2018 4:45 AM IST (Updated: 3 Sept 2018 1:27 AM IST)
t-max-icont-min-icon

ஏரி சங்கங்களுக்கு பணம் பட்டுவாடா செய்து வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார்.

பாகூர்,

புதுவை கவர்னர் கிரண்பெடி வார இறுதி நாட்களில் நகர மற்றும் கிராம புறங்களில் ஆய்வு செய்து வழக்கம். தற்போது அவர் நிலத்தடி நீர் சேமிப்புக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

பாகூர் அருகில் தமிழக பகுதியில் உள்ள சொர்ணாவூர் அணைக்கட்டை கிரண்பெடி நேற்று காலை பார்வையிட்டார். அவருடன், புதுவை கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்ரி, பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர் சண்முகசுந்தரம், கண்காணிப்பு என்ஜினீயர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் தாமரை புகழேந்தி மற்றும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

அப்போது புதுவை–தமிழக அதிகாரிகள் அணைக்கட்டின் விவரங்களை கவர்னர் கிரண்பெடியிடம் தெரிவித்தனர். இந்த அணைக்கட்டு மூலம் பாகூர் மற்றும் அதனை சுற்றி உள்ள விவசாயிகள் பாசன வசதி பெற்று வருவதாகவும், பங்காரு வாய்க்கால் வழியாக பாகூர் ஏரி மற்றும் அதனை சுற்றி உள்ள 15–க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் செல்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனை கேட்ட கவர்னர் கிரண்பெடி தற்போது மழை காலம் தொடங்கி உள்ளதால் அணைக்கட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்று அதிகாரிகளிடம் கேட்டார். ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள், உபரிநீர் வெளியேற்றப்படும் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்பட்டு உள்ளதா? என்றும் கேட்டறிந்தார்.

அதற்கு பதில் அளித்த அதிகாரிகள் ஏரிவாய்க்கால் தூர்வாரும் பணியில் ஈடுபட்ட ஏரி சங்கங்களுக்கு பணம் பட்டுவாடா செய்யாததால் பெரும்பாலான வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை என்று தெரிவித்தனர். இதனையடுத்து கவர்னர் கிரண்பெடி ஏரி சங்கங்களுக்கு உடனடியாக பணம் பட்டுவாடா செய்து வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த பணிகளை 15 நாட்களுக்கு முடிக்க வேண்டும். வாய்க்கால்களை யாராவது ஆக்கிரமிப்பு செய்திருந்தால் பாரபட்சமின்றி ஆக்கிர மிப்புகளை அகற்ற வேண்டும். நீர்நிலைகள் நிரம்ப தமிழகம்–புதுவை அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும். இந்த பணிகளை 15 நாட்களுக்கு பிறகு பார்வையிட வருவதாக அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

கவர்னர் கிரண்பெடி சொர்ணாவூர் அணைக்கட்டில் ஆய்வு செய்வதை அறிந்த கரையாம்புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் அங்கு வந்தனர். அப்போது அவர்கள் தங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் ஆய்வு செய்ய வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதைக் கேட்ட கவர்னர் கிரண்பெடி விரைவில் வருகிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு கவர்னர் மாளிகைக்கு திரும்பினார்.


Next Story