அன்பும், அரவணைப்பும் கிடைக்காத குழந்தைகள்தான் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்
குழந்தைகளை புறக்கணிக் கக்கூடாது என்றும், அன்பும், அரவணைப்பும் கிடைக்காத குழந்தைகள் தான் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார்.
சென்னை,
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அரசு சிறுமிகள் இல்லத்தில் சமூக பாதுகாப்புத்துறையும், குழந்தைகளை காப்போம் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து ரூ.11.50 லட்சம் செலவில் குழந்தைகளுக்கான பல்நோக்கு கட்டிடத்தை கட்டி உள்ளது. இதன் திறப்பு விழா மற்றும் கூடுதல் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
பல்நோக்கு கட்டிடத்தை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இந்திராபானர்ஜி திறந்து வைத்தார். விழாவில் அவர் பேசும்போது கூறியதாவது:-
குழந்தைகள் நலனுக்காக இந்த கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தைகளை புறக்கணிக்கக்கூடாது. அன்பும், அரவணைப்பும் கிடைக்காத குழந்தைகள்தான் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
சிறார் நீதிச் சட்டத்தின் படி, குற்றச் செயல்களில் ஈடுபடும் குழந்தைகளுக்கு அதிகபட்சமாக மூன்றாண்டுகள் மட்டுமே தண்டனை வழங்கப்படுகிறது. இதை சமூக விரோத கும்பல் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, குழந்தைகளை குற்றச் செயல்களில் ஈடுபடுத்துகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானி, கூடுதல் கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்து பேசினார். அப்போது அவர், ‘குழந்தைகள் கடவுளின் பரிசு. அவர்களை ஒவ்வொரு நிலையிலும் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. இந்தியாவில் 3½ கோடி குழந்தைகளுக்கு அரவணைப்பு தேவைப்படுவதாகவும், குழந்தைகளுக்கு எதிராக 30 லட்சம் குற்ற சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், 38 ஆயிரம் குழந்தைகளுக்கு குற்ற சம்பவங்களில் தொடர்பு உள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குழந்தைகள் பாதுகாப்புக்கு தேவையான சட்டங்களை வகுத்து தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. குழந்தைகள் பாதுகாப்புக்கு ஐகோர்ட்டும் தீவிரமாக பங்காற்றி வருகிறது’ என்று கூறினார்.
விழாவில், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை முதன்மை செயலாளர் மணிவாசன், சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story