குளிக்கும்போது சம்பவம்: அமராவதி ஆற்றில் மூழ்கிய வாலிபரின் கதி என்ன?


குளிக்கும்போது சம்பவம்: அமராவதி ஆற்றில் மூழ்கிய வாலிபரின் கதி என்ன?
x
தினத்தந்தி 6 Sep 2018 10:58 PM GMT (Updated: 6 Sep 2018 10:58 PM GMT)

தாராபுரம் அமராவதி ஆற்றில் குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கிய வாலிபரின் கதி என்ன? என்று தெரியவில்லை.

தாராபுரம், 


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி காக்கா சோலை பகுதியை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் விக்னேஸ்வரன் (வயது 28). எலக்ட்ரீசியன். இவரும், இவருடைய நண்பர்கள் 9 பேரும் ஒரு காரில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொள்ள சென்றனர். அங்கு திருமண விழாவில் கலந்து கொண்டு விட்டு அதே காரில் கோத்தகிரி நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்தனர். அந்த கார், தாராபுரம் புறவழிச்சாலை அமராவதி புதிய ஆற்றுப்பாலம் அருகே வந்து கொண்டிருந்தது. தற்போது அமராவதி ஆற்றில் அதிகளவு தண்ணீர் சென்று கொண்டிருப்பதால், தண்ணீரை பார்த்ததும் அவர்கள் அனைவருக்கும் ஆற்றில் இறங்கி குளிக்கும் ஆசை ஏற்பட்டது. உடனே காரை பாலத்தின் ஓரமாக நிறுத்தி விட்டு, அனைவரும் ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது விக்னேஸ்வரன் திடீரென்று தண்ணீரில் மூழ்கினார். உடனே அவர் “காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...” என்று கூச்சலிட்டார். இதனால் அவருடைய நண்பர்கள், அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதையடுத்து தாராபுரம் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று தண்ணீரில் மூழ்கிய விக்னேஸ்வரனை தேடினார்கள். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவருடைய கதி என்ன? என்று தெரியவில்லை. இதற்கிடையில் இரவு நேரம் ஆகிவிட்டதால், தேடுதல் பணியை போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் தற்காலிகமாக நிறுத்திவைத்தனர். இதையடுத்து மீண்டும் தேடுதல் பணி (இன்று) காலை நடைபெறும் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். 

Next Story