30 நாட்களுக்கு பின் இடுக்கி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்


30 நாட்களுக்கு பின் இடுக்கி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
x
தினத்தந்தி 8 Sep 2018 10:41 PM GMT (Updated: 2018-09-09T04:11:44+05:30)

30 நாட்களுக்கு பின்னர் இடுக்கி அணையின் அனைத்து மதகுகளும் மூடப்பட்டு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

இடுக்கி,

கேரளத்தில் கடந்த மாதம் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் இடுக்கி அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 401 அடி உயரம் கொண்ட இடுக்கி அணையில் 2 ஆயிரத்து 399.4 அடியாக நீர்மட்டம் உயர்ந்தபோது அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து இடுக்கி அணையின் துணை அணையான 5 மதகுகளை கொண்ட செருதோணி அணையின் ஒரு மதகில் இருந்து மட்டும் கடந்த மாதம் 9–ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அணைக்கு தொடர்ந்து நீர்மட்டம் அதிகரித்து வந்ததால் 10–ந்தேதி மீதமுள்ள 4 மதகுகளும் அடுத்தடுத்து திறக்கப்பட்டன. இதையடுத்து அணையில் இருந்து வினாடிக்கு 7 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் நீர்மட்டம் குறைந்தது. இதையடுத்து கடந்த மாதம் 13–ந்தேதி 2 மதகுகள் மூடப்பட்டன. ஆனால் கனத்த மழை தொடர்ந்து பெய்துகொண்டே இருந்ததால் இடுக்கி அணைக்கு மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அடைக்கப்பட்ட 2 மதகுகளும் 15–ந்தேதி திறக்கப்பட்டன. ஆனாலும் அணையின் நீர் மட்டம் உயர்ந்துகொண்டே வந்தது. இதையடுத்து 5 மதகுகளில் இருந்தும் வினாடிக்கு 15 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

அதன்பிறகு மழை குறைந்ததால் அடுத்தடுத்து அணையின் 4 மதகுகள் மூடப்பட்டன. இதையடுத்து ஒரு மதகில் இருந்து மட்டும் வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கேரள அணைகள் பாதுகாப்பு மற்றும் ஆய்வுக்குழு நிர்வாக என்ஜினீயர் பாலு தலைமையில் அணையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது இந்த குழுவின் உத்தரவின் பேரில் திறந்திருந்த ஒரு மதகும் நேற்று முன்தினம் மூடப்பட்டு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

கடந்த 9–ந்தேதி திறக்கப்பட்ட மதகுகள் 30 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மூடப்பட்டன. இடுக்கி அணையின் வரலாற்றில் 30 நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்டது இதுவே முதன்முறை ஆகும். அணையில் இருந்து 30 நாட்களாக வெளியேற்றப்பட்ட நீரில் இருந்து 1,500 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்திருப்பதாக மின்சாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story