திருப்பூர் மாவட்டத்தில் 2,030 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி


திருப்பூர் மாவட்டத்தில் 2,030 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி
x
தினத்தந்தி 11 Sep 2018 11:19 PM GMT (Updated: 11 Sep 2018 11:19 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் 2,030 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருப்பூர்,

விநாயகர் சதுர்த்தி விழா நாளை(வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் வீதிகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். விநாயகர் சிலைகள் வைப்பதற்கு 20 நிபந்தனைகள் விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மின்வாரியத்துறை, தீயணைப்புத்துறை, மாநகராட்சி நிர்வாகம், காவல்துறை சார்பில் சிலைகள் வைப்பதற்கு நிபந்தனைக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி திருப்பூர் மாநகரில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கு அனுமதி பெறும் வகையில் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய வளாகத்தில் விநாயகர் சதுர்த்தி ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டது. இதில் அனைத்து துறை அதிகாரிகளும் விண்ணப்பங்களை பெற்று, பின்னர் சிலைகள் வைப்பதற்கான அனுமதியை வழங்கினார்கள். இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, இந்து மக்கள் கழகம், பாரத் சேனா, விஷ்வ இந்து பரிஷத், பொதுமக்கள் தரப்பில் விண்ணப்பித்தனர்.

திருப்பூர் வடக்கு காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் 513 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்க விண்ணப்பித்தார்கள். இதில் வேலம்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட 5 இடங்கள், வடக்கு போலீஸ் நிலையம், அனுப்பர்பாளையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் 4 இடங்கள் என மொத்தம் 9 இடங்களில் சிலைகள் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. 504 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதுபோல் தெற்கு காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் 350 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க விண்ணப்பிக்கப்பட்டது. இதில் 337 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க நிபந்தனைக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தெற்கு போலீஸ் நிலையம், வீரபாண்டி பகுதியில் தலா 6 இடங்கள், மத்திய போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 1 இடம் என 13 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி மறுக்கப்பட்டு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. மாநகரில் மொத்தம் 841 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதித்துள்ளனர்.

அனுமதி கடிதங்கள் அந்தந்த போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் அனுமதி கடிதத்தை பெறலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதில் இந்து முன்னணி அமைப்பினர் அனுமதிக்கான கடிதத்தை பெறாமல் உள்ளனர். கட்டுப்பாடுகள் இல்லாமல் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த அமைப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்ட காவல்துறையின் கீழ் உள்ள அவினாசி, பல்லடம், காங்கேயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம், ஊத்துக்குளி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் 1,189 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க நிபந்தனைக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Next Story