தமிழகம் முழுவதும் நியாய விலைக்கடை பணியாளர்கள் காலவரையற்ற போராட்டம்


தமிழகம் முழுவதும் நியாய விலைக்கடை பணியாளர்கள் காலவரையற்ற போராட்டம்
x
தினத்தந்தி 14 Sep 2018 11:56 PM GMT (Updated: 14 Sep 2018 11:56 PM GMT)

30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம்(அக்டோபர்) 15-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் நியாய விலைக்கடை பணியாளர்கள் காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தை நடத்த உள்ளதாக கடலூரில் நடந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடலூர், 

பொது வினியோக திட்டத்திற்கென தனித்துறை அமைக்கப்பட வேண்டும். கூட்டுறவுத்துறை பணியாளர்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அத்தியாவசியமான பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் பொட்டலமாக வழங்கப்பட வேண்டும் என்பன உள்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நேற்று கடலூர் டவுன்ஹாலில் நடந்தது.

மாநாட்டுக்கு மாநில தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் ஜெயசந்திரராஜா வரவேற்றார். மாநில துணை தலைவர்கள் விசுவநாதன், செல்லத்துரை, பிரகாஷ், துரை.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன், மாநில பொதுச்செயலாளர் கோபிநாத், முன்னாள் மாநில தலைவர் பால்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் மாநில இணை செயலாளர் ராமலிங்கம், மாநில துணை தலைவர் தினகரன், மாநில துணை தலைவர் சோமேஸ்வரன், மாநில இணை செயலாளர் தனுஷ்கோடி, மாநில இணை செயலாளர் மாரிமுத்து மற்றும் காஞ்சீபுரம், கோவை, விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நியாய விலை கடை பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மாநாட்டில், பணிவரன் முறை உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் நியாய விலைக்கடை பணியாளர்கள் காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தை நடத்துவது,

பொது வினியோகத்திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் கம்பு, கேழ்வரகு, தினை போன்ற சிறுதானிய பொருட்கள் நியாய விலைக்கடையில் வழங்கப்படுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது வினியோகத்திட்டத்தில் வழங்கப்படும் கட்டுப்பாடு பொருட்கள் அனைத்தையும் உரிய விவசாயிகளிடம் இருந்து அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Next Story