அண்ணா பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்போட்டி


அண்ணா பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்போட்டி
x
தினத்தந்தி 15 Sep 2018 10:45 PM GMT (Updated: 15 Sep 2018 6:26 PM GMT)

அண்ணா பிறந்தநாளையொட்டி தஞ்சையில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. போட்டியை முதன்மை சார்பு நீதிபதி மாலதி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேன்மதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரமும், 15 மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், 13 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 10 கி.மீ. தூரமும், 15 மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் போட்டி நடத்தப்பட்டது. இதில் 180 மாணவர்களும், 168 மாணவிகளும் என மொத்தம் 348 பேர் பங்கேற்றனர்.

மாணவிகளுக்கான போட்டியில் 13 வயதிற்குட்பட்டோர் பிரிவில் தஞ்சையை சேர்ந்த மதுமிதா, ரித்திகா கேத்ரின், சகானா ஆகியோரும், 15 வயதிற்குட்பட்டோர் பிரிவில் தஞ்சையை சேர்ந்த தாட்சாயினி, சபரி, பரமேஸ்வரி ஆகியோரும், 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் தஞ்சையை சேர்ந்த மிரியம்மிஸ்பா ஆர்கிட், சபிதா, சுருதிகா ஆகியோரும் முதல் 3 இடங்களை பிடித்தனர்.மாணவர்களுக்கான போட்டியில் 13 வயதிற்குட்பட்டோர் பிரிவில் தஞ்சையை சேர்ந்த லோகேஷ், விமல், பாலாஜி ஆகியோரும், 15 வயதிற்குட்பட்டோர் பிரிவில் தஞ்சையை சேர்ந்த சுதீந்த்ரா, இலக்கியன், ஹரிநாராயணன் ஆகியோரும், 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் தஞ்சையை சேர்ந்த பிரசாத், அருண் பாலாஜி, ஜெகதீஸ்வரன் ஆகியோரும் முதல் 3 இடங்களை பிடித்தனர்.

முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 4 முதல் 10 இடங்களை பெற்றவர்களுக்கு போட்டியில் பங்கேற்றதற்கான தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பாபு வரவேற்றார். முடிவில் பளுதூக்குதல் பயிற்சியாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Next Story