திருவண்ணாமலையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் மதுபாட்டில்கள் வீசப்பட்டதால் ‘திடீர்’ பதற்றம்


திருவண்ணாமலையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் மதுபாட்டில்கள் வீசப்பட்டதால் ‘திடீர்’ பதற்றம்
x
தினத்தந்தி 15 Sep 2018 11:41 PM GMT (Updated: 15 Sep 2018 11:41 PM GMT)

திருவண்ணாமலையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் மர்ம நபர்கள் மதுபாட்டில்களை வீசியதால் திடீர் பதற்றம் ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு அமைதியை ஏற்படுத்தினர்.

திருவண்ணாமலை,

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 13-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி மற்றும் இளைஞர்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில் முக்கிய இடங்களில் 1,500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் விதவிதமாக வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டன.

மேலும் வீடு, கடை, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் களி மண்ணால் செய்யப்பட்ட சிறிய வடிவிலான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்து வழிபாடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து காலை மற்றும் மாலை வேளையில் விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

விநாயகர் சிலைகளை கரைக்க மாவட்ட நிர்வாகத்தினால் திருவண்ணாமலையில் உள்ள தாமரைக்குளம், சிங்காரப்பேட்டை ஏரி, கோணிராயன் குளம், ஐந்து கண் வாராபதி, பூமா செட்டிகுளம், போளூர் ஏரி, கூர் ஏரி ஆகியவற்றில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

ஊர்வலம்

இந்த நிலையில் திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் உள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. மதியம் 1 மணி அளவில் இந்து முன்னணி சார்பில், மாநில பேச்சாளர் சங்கர் தலைமையில் திருவண்ணாமலை மாட வீதியில் உள்ள காந்தி சிலை அருகே இந்த ஊர்வலம் தொடங்கியது. பின்னர் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தின் முன்பு பூஜை செய்யப்பட்டு ஊர்வலம் தொடர்ந்து சென்றது.

இந்த ஊர்வலம் தேரடி வீதி, திருமஞ்சன வீதி, செங்கம் ரோடு வழியாக சென்றது. ஊர்வலம் செங்கம் ரோட்டை கடந்து கல்நகர் வழியாக செல்லும் போது திடீரென மர்ம நபர்கள் மறைவான இடத்தில் இருந்து விநாயகர் ஊர்வலத்தில் மதுபாட்டில்களை வீசினர். சுமார் 50-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் வீசப்பட்டதால் அங்கு ‘திடீர்’ பதற்றம் ஏற்பட்டது.

கண்ணாடி உடைந்தது

ஊர்வலத்தில் வந்தவர்கள் நாலாபுறமாக சிதறி அங்கும் இங்குமாக ஓடினர். அப்போது சில இளைஞர்கள் மது பாட்டில்கள் வீசிய பகுதியை நோக்கி கற்களை வீசினர்.

மதுபாட்டில்கள் விழுந்த பகுதியில் ஒரு மினி பஸ் நின்று கொண்டிருந்தது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் இருந்தனர். இந்த மதுபாட்டில்கள் வீச்சினால் பஸ்சின் ஒரு பக்கத்தில் இருந்த கண்ணாடி உடைந்தது. இதனால் பயந்து போன பள்ளி மாணவ, மாணவிகளும் அலறினர். இதையடுத்து பஸ் டிரைவர் பஸ்சை இயக்க முயன்றார். ஆனால் பஸ் ‘ஸ்டார்ட்’ ஆகவில்லை. இதையடுத்து போலீசார் அந்த மினி பஸ்சை தள்ளிவிட்டு ‘ஸ்டார்ட்’ செய்தனர்.

சிலைகள் கரைப்பு

பின்னர் மதுபாட்டில்கள் வந்த பகுதியை நோக்கி போலீசார் விரைந்து சென்றனர். மேலும் அந்த பகுதியில் சாலையோரம் இருந்த இளைஞர்களை போலீசார் விரட்டினர். இந்த மதுபாட்டில் வீச்சால் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை.

இதையடுத்து தொடர்ந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் தாமரைக்குளத்தில் கரைக்கப்பட்டன. சிறிய சிலைகளை பொதுமக்கள் தண்ணீரில் தூக்கி போட்டும், பெரிய விநாயகர் சிலைகள் கிரேன் மூலமும் கரைக்கப்பட்டன. சிலைகள் கரைக்கும் பகுதியிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story