கோவில்பட்டியில் கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்கும் விழா


கோவில்பட்டியில் கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்கும் விழா
x
தினத்தந்தி 19 Sept 2018 3:30 AM IST (Updated: 19 Sept 2018 1:03 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி கூட்டுறவு சங்கங்களில் நடைபெற்ற விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்று, பயனாளிகளுக்கு கடன் உதவி வழங்கினார்.

கோவில்பட்டி, 


கோவில்பட்டியை அடுத்த இனாம் மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்கும் விழா நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமை தாங்கினார். கூட்டுறவு கடன் சங்க தலைவர் மகேஷ்குமார் முன்னிலை வகித்தார். நிலவள வங்கி தலைவர் ரமேஷ் வரவேற்று பேசினார். கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் அருளரசு வாழ்த்தி பேசினார்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ 5 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு சுயதொழில் தொடங்குவதற்கு கடனாக ரூ.33 லட்சமும், 3 பேருக்கு நுகர்வோர் கடனாக ரூ.1 லட்சத்து 15 ஆயிரமும், 5 பேருக்கு சிறுவணிக கடனாக ரூ.2 லட்சத்து 97 ஆயிரமும் வழங்கினார்.

பின்னர் கோவில்பட்டி அருகே துறையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்கும் விழா நடந்தது. கூட்டுறவு கடன் சங்க தலைவர் கணேஷ் பாண்டியன் வரவேற்று பேசினார். அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறுவணிக கடனாக 103 பேருக்கு ரூ.10 லட்சத்து 30 ஆயிரமும், விவசாய கடனாக 28 பேருக்கு ரூ.10 லட்சமும் வழங்கினார்.

பின்னர் கோவில்பட்டியில் இருந்து எட்டுநாயக்கன்பட்டி வழியாக காமநாயக்கன்பட்டிக்கு புதிய வழித்தடத்தில் அரசு டவுன் பஸ் சேவை நேற்று தொடங்கப்பட்டது. கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் நடந்த விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கொடி அசைத்து புதிய வழித்தடத்தில் டவுன் பஸ் சேவையை தொடங்கி வைத்தார்.

விழாவில் கோவில்பட்டி தாசில்தார் பரமசிவன், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், யூனியன் ஆணையாளர் கிரி, போக்குவரத்து கழக கோட்ட பொது மேலாளர் துரைராஜ், உதவி கோட்ட மேலாளர் சுப்பிரமணியன், பணிமனை கிளை மேலாளர் ரமேசன், அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், கயத்தாறு நகர பஞ்சாயத்து புதுக்கோட்டை ஆதி திராவிடர் தெரு, யாதவர் தெரு, அரசன்குளம், கிறிஸ்தவ மயானம், பழைய கடம்பூர் ரோடு ஆகிய 5 இடங்களில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.2½ லட்சம் செலவில் ஆழ்குழாய் கிணறு, மின் மோட்டார் அறையுடன் கூடிய குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கி, குடிநீர் தொட்டிகளை திறந்து வைத்தார்.

கயத்தாறு சிதம்பரனார் தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சம் செலவில் சிமெண்டு தள கற்கள் பதிக்கப்பட்டு உள்ளது. இதனை அமைச்சர் திறந்து வைத்தார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், நகர பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் மாஹின் அபுபக்கர், உதவி செயற்பொறியாளர் முகமது செரிப், கயத்தாறு நகர பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் அழகர், தாசில்தார் லிங்கராஜ், மண்டல துணை தாசில்தார் பாஸ்கரன், யூனியன் ஆணையாளர் முத்துகுமார், முன்னாள் நகர பஞ்சாயத்து துணை தலைவர் முருகேசன், நகர செயலாளர் ராமசாமி, உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story