சிறு, குறு தொழில் தொடங்குவதற்கு மாற்றுத்திறனாளிகள் கடன்பெற விண்ணப்பிக்கலாம்


சிறு, குறு தொழில் தொடங்குவதற்கு மாற்றுத்திறனாளிகள் கடன்பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 21 Sep 2018 9:45 PM GMT (Updated: 21 Sep 2018 6:12 PM GMT)

சிறு,குறு தொழில் தொடங்குவதற்கு மாற்றுத்திறனாளிகள் கடன்பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அண்ணாதுரை கூறி உள்ளார். தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சாவூர்,


தஞ்சை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறு,குறு தொழில் தொடங்குவதற்கான வங்கிக்கடன் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2018-2019-ம் நிதியாண்டிற்கு தகுதியான மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச கடன்தொகையாக பெறப்படும் ரூ.75ஆயிரத்திற்கு அதிகபட்ச மானியமாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். தமிழக முதல்-அமைச்சரால் நடப்பு நிதியாண்டில் முதற்கட்டமாக 100 நபர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் 25 லட்சம் ரூபாய் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திட்டத்தில் பயன் பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் 18 வயது முதல் 45 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெறும் மாற்றுத்திறனாளிகள் மட்டுமே இத்திட்டத்தில் பயன் பெறலாம். இந்த திட்டம் குறித்து மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தினை நேரில் அணுகலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார். 

Next Story