சமூக வலைதளத்தில் அமைச்சர் தங்கமணி குறித்து அவதூறு: முன்னாள் பெண் எம்.எல்.ஏ. கைது


சமூக வலைதளத்தில் அமைச்சர் தங்கமணி குறித்து அவதூறு: முன்னாள் பெண் எம்.எல்.ஏ. கைது
x
தினத்தந்தி 21 Sep 2018 11:30 PM GMT (Updated: 21 Sep 2018 9:53 PM GMT)

அமைச்சர் தங்கமணி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பரப்பிய முன்னாள் எம்.எல்.ஏ. சரஸ்வதி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நேற்று நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாமக்கல்,

நாமக்கல் முல்லை நகரை சேர்ந்தவர் மோகன். இவருடைய மனைவி சரஸ்வதி (வயது 59). இவர் கடந்த 1991-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் கபிலர்மலை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இவர் அ.தி.மு.க.வில் இருந்து விலகி, தி.மு.க.வில் இணைந்தார்.

இந்த நிலையில் சரஸ்வதி மீது கீரம்பூரை சேர்ந்த அ.தி.மு.க. கிளை செயலாளர் ராஜா (34) என்பவர் நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

முன்னாள் எம்.எல்.ஏ. சரஸ்வதி தொடர்ந்து, தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி பற்றி சமூக வலைதளமான ’வாட்ஸ்-அப்’பில் அவதூறு கருத்துகளை பரப்பி வருகிறார். இதை எனது மனைவியின் ‘வாட்ஸ்-அப்’ எண்ணிற்கு தொடர்ந்து அனுப்பி வருகிறார். இதுபற்றி அவரை சந்தித்து கேட்டபோது, அவர் என்னை ஆபாச வார்த்தைகளால் திட்டி மிரட்டினார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தார்.

இதைத்தொடர்ந்து நாமக்கல் போலீசார், முன்னாள் எம்.எல்.ஏ. சரஸ்வதி மீது கொலைமிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று காலை முல்லைநகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற இன்ஸ்பெக்டர் குலசேகரன் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர்.

பின்னர் நாமக்கல் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து அவரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து அவரை நாமக்கல் முதலாவது குற்றவியல் கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு தமயந்தி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது சரஸ்வதி தனக்கு உடல்நலக்குறைவு இருப்பதாக கூறினார். இதையடுத்து மாஜிஸ்திரேட்டு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து போலீசார் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வந்தனர். இங்கு அவர் டாக்டர்களிடம் தாம் எடுத்து வரும் சிகிச்சைக்காக ஆதாரங்களை காண்பித்தார். இதையடுத்து டாக்டர்கள் குழுவினர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

இதைதொடர்ந்து போலீசார் மீண்டும் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் அவரை ஆஜர்படுத்தினர். அப்போது மாஜிஸ்திரேட்டு தமயந்தி, முன்னாள் எம்.எல்.ஏ. சரஸ்வதியை வருகிற 1-ந் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவரை சேலம் பெண்கள் சிறைக்கு அழைத்து சென்றனர். அங்கு தேவைப்பட்டால் சிறை நிர்வாகம் அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யும் என போலீசார் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் சேலம் அழைத்து வரப்பட்டார். அப்போது வரும் வழியில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து போலீசார் முன்னாள் எம்.எல்.ஏ. சரஸ்வதியை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

முன்னதாக நாமக்கல் மகளிர் போலீஸ் நிலையத்தில் இருந்தபோது அவரை நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காந்திசெல்வன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராஜேஸ்குமார் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

அமைச்சர் தங்கமணி பற்றி சமூகவலைதளத்தில் அவதூறு கருத்து பரப்பியதாக முன்னாள் பெண் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story