பனைக்குளம் கடற்கரையில் குவியும் வெளியூர் மது பிரியர்கள்; போலீசார் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

பனைக்குளம் கடற்கரையில் இரவு நேரத்தில் வெளியூர்களை சேர்ந்த மதுபிரியர்கள் வந்து மது அருந்துவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதற்கு போலீசார் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பனைக்குளம்,
மண்டபம் யூனியன் ஆற்றங்கரை, அழகன்குளம், பனைக்குளம், புதுவலசை, அத்தியூத்து, சித்தார்கோட்டை வரையிலும் நீண்ட கடற்கரை உள்ளது. பனைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு, கிருஷ்ணாபுரம், சோகையன்தோப்பு ஆகிய பகுதிகளில் அதிகப்படியான மீனவர்கள் வசித்து வருகின்றனர்.
மேலும் பனைக்குளம் கடற்கரையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். இப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை கடற்கரையிலேயே பாதுகாப்பாக வைத்துவிட்டு மறுநாள் காலையில் அவற்றை எடுத்துக்கொண்டு கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள்.
இந்த நிலையில் சமீப காலமாக வெளியூர்களை சேர்ந்த மது பிரியர்கள் அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபானங்களை வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனங்களில் புதுக்குடியிருப்பு வழியாக பனைக்குளம் கடற்கரைக்கு வந்து மணலில் அமர்ந்து மது அருந்துகின்றனர்.
மேலும் காலி மது பாட்டில்களை அங்கேயே வீசிச்செல்வதால் கடற்கரை பகுதி முழுவதும் ஆங்காங்கே மது பாட்டில்கள் கிடக்கின்றன. இதுதவிர மது அருந்துபவர்கள் புகை பிடித்துவிட்டு அணைக்காமல் வீசிச்செல்வதால் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் கடற்கரையோரம் உள்ள மரங்களுக்கும், மீனவர்கள் வைத்துச்செல்லும் வலைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே கடற்கரையில் மது அருந்துவதை தடுக்க கடலோர போலீசார் ரோந்து சென்று தடுக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.