மாவட்டம் முழுவதும் 1,648 இடங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

வேலூர் மாவட்டம் முழுவதும் 1,648 இடங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடந்தது. முகாமை மாவட்ட தேர்தல் பார்வையாளர் சந்தோஷ் மிஸ்ரா, கலெக்டர் ராமன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
வேலூர்,
தமிழகம் முழுவதும் கடந்த 1-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள சிறப்பு முகாம் நடத்தும்படி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி தமிழகத்தில் கடந்த 9-ந் தேதி முதற்கட்டமாக வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடந்தது.
வேலூர் மாவட்டத்தில் 1,681 இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் 20 ஆயிரம் பேர் கலந்துகொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி மாற்றம் செய்வது தொடர்பான விண்ணப்பங்களை வழங்கினர்.
இந்த நிலையில் 2-ம் கட்டமாக வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நேற்று நடந்தது. வேலூர் மாவட்டம் முழுவதும் 1,648 இடங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுமக்கள் காலை முதலே சிறப்பு முகாம்களுக்கு சென்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பித்தனர்.
தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி, பலவன்சாத்து, இடையன்சாத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களை வேலூர் மாவட்ட தேர்தல் பார்வையாளர் சந்தோஷ் மிஸ்ரா, கலெக்டர் ராமன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின்போது வேலூர் உதவி கலெக்டர் மேகராஜ், தேர்தல் பிரிவு தாசில்தார் பாலாஜி மற்றும் வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.
மாவட்டம் முழுவதும் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் பணிகளில் 3 ஆயிரத்து 453 வாக்குச்சாவடி அதிகாரிகளும், 1,648 தலைமை ஆசிரியர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் அடுத்த (அக்டோபர்) மாதம் 7,14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story