வேணுகோபாலசுவாமி கோவில் ஊஞ்சல் மண்டபம் இடிந்து விழுந்தது

வெங்கடாம்பேட்டையில் ரூ.1½ கோடியில் புதுப்பிக்கப்பட்ட 3 மாதத்திலேயே வேணுகோபாலசுவாமி கோவில் ஊஞ்சல் மண்டபம் இடிந்து விழுந்தது. தரமின்றி அமைக்கப்பட்டதாக பக்தர்கள் புகார் கூறி உள்ளனர்.
கடலூர்,
குறிஞ்சிப்பாடி அருகே வெங்கடாம்பேட்டையில் வேணுகோபாலசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் கி.பி.1464-ல் கட்டப்பட்டதாகும். இந்த கோவிலை கிருஷ்ணதேவ ராயர் கட்டினார் என்று வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இக்கோவிலில் கிருஷ்ணர் ருக்மணி, சத்யபாமா ஆகியோருடன் நின்ற கோலத்திலும், பெருமாள் அமர்ந்த கோலத்திலும், ராமர் (அனந்த சயன கோலத்திலும்) படுத்த நிலையிலும் காட்சி அளிக்கிறார்கள்.
திரேதா யுகத்தில் ராமபிரான் இலங்கை சென்று வீரமாக போரிட்டு சீதாதேவியை மீட்டு திரும்பும் போது ராமேசுவரத்தில் சிவபூஜையை முடித்து விட்டு சிதம்பரம் வழியாக வந்து கொண்டிருந்தார். ஏற்கனவே ராவணனுடன் போரிட்டு களைத்து, தூக்கம் இல்லாமல் இருந்ததால், சற்று இளைப்பாற எண்ணி தரையில் படுக்க சென்றார். இதை கண்ட லட்சுமணன் ஆதிசேஷன் உருவமெடுத்து, உடலை மெத்தையாகவும், சிரசை குடையாகவும் விரித்து படுக்க, அதன் மீது ராமபிரான் மேற்கு கிழக்காக பள்ளி கொண்டார். சீதாதேவி அருகே இருந்து அவரது கால்களை பிடித்து விட்டார்.
இந்த இடம் தான் வெங்கடாம்பேட்டை என்று தற்போது அழைக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள ராமபிரான் சயன கோல திருவடிவத்தை வேறெங்கும் காண்பது அரிது. இவரை தரிசித்தால் மன நிம்மதி, உண்டாவதை நாம் அனுபவபூர்வமாக அறியலாம். பிரச்சினைகளில் சிக்கி தவிப்போர், மன சஞ்சலத்தில் உள்ளோர் இவரை தரிசித்தால், மனதில் தெளிவு தோன்றி புத்துணர்வு உண்டாகும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.
மன்னர்கள் காலத்துக்கு பிறகு இக்கோவில் அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் பல ஆண்டுகளாக கோவில் பராமரிப்பின்றி காணப்பட்டது. இதன் பிறகு இந்து சமய அறநிலையத்துறை ஒத்துழைப்புடன் இக்கோவில் திருப்பணி வேலைகள் முடிவடைந்து கடந்த 2009-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. ராஜகோபுரத்துக்கு கடந்த 2017-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
கிருஷ்ணதேவராயர் காலத்திலேயே இக்கோவிலுக்கு எதிரில் முற்றிலும் கல்லால் ஊஞ்சல் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. திருவிழாக்காலங்களில் இந்த மண்டபத்தில் சாமியை வைத்து ஊஞ்சல் உற்சவம் நடத்துவதை வழக்கமாக வைத்திருந்தனர். காலப்போக்கில் அந்த மண்டபம் சேதமடைந்தது. கல்லால் ஆன தூண்கள் கீழே விழுந்தன. இதையடுத்து இந்த ஊஞ்சல் மண்டபத்தை பழமைமாறாமல் புதுப்பிக்க இந்து சமய அறநிலையத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக ரூ.1½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதியில் இருந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஊஞ்சல் மண்டபம் புதுப்பிக்கும் பணி நடந்தது. கடந்த ஜூலை மாதத்தில்தான் பணிகள் முடிவடைந்தது.
ஆனால் இந்த மண்டபத்தின் மேற்கூரையை தாங்க வைக்கப்பட்டு உள்ள 2 கல் தூண்களில் கடந்த ஜூலை மாதம் கடைசியில் விரிசல் விட்டு, உடைந்த நிலையில் இருந்தது. அந்த 2 தூண்களும் எப்போது வேண்டுமானாலும் கீழே இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்தர்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். ஆனால் அதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில் 150 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோவிலில் பிரம்மோற்சவம் நேற்று முன்தினம் காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் ஒரு நிகழ்ச்சியாக புதுப்பிக்கப்பட்ட ஊஞ்சல் மண்டபத்தில் வேணுகோபாலசுவாமி ஊஞ்சல் உற்சவம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்திருந்தனர்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு வேணுகோபாலசுவாமி வீதிஉலா சென்று விட்டு, 10.30 மணிக்கு கோவிலை வந்தடைந்தார். அப்போது திரளான பக்தர்களும் கோவிலில் திரண்டிருந்தனர். 10.40 மணிக்கு திடீரென ஊஞ்சல் மண்டபத்தின் ஒரு பகுதியில் மேற்கூரையை தாங்கி இருந்த 2 கல் தூண்கள் இடிந்து விழுந்தது. இதை கண்ட பக்தர்கள் அலறி அடித்து ஓடினர்.
இது குறித்து பக்தர்கள் கூறுகையில், ரூ.1½ கோடியில் புதுப்பிக்கப்பட்டு 3 மாதத்திலேயே ஊஞ்சல் மண்டபத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இதற்கு காரணம் தரமாக புதுப்பிக்கவில்லை என்றுதான் கூறுவோம். ஏனெனில் புதுப்பித்த 2 வாரத்திலேயே மேற்கூரையை தாங்கி இருந்த 2 கல் தூண்களில் விரிசல் ஏற்பட்டிருந்தது. இது பற்றி தெரிவித்தும், இந்து சமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பழமையான இந்த கோவிலில் தரமான ஊஞ்சல் மண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story