உதவி பேராசிரியர் மீது பாலியல் புகார்: திருச்சி கல்லூரிக்கு செல்ல மறுத்த மாணவிக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்


உதவி பேராசிரியர் மீது பாலியல் புகார்: திருச்சி கல்லூரிக்கு செல்ல மறுத்த மாணவிக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 24 Sep 2018 11:12 PM GMT (Updated: 24 Sep 2018 11:12 PM GMT)

வேளாண் கல்லூரி உதவி பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவி திருச்சி கல்லூரிக்கு செல்ல மறுத்து வருவதால் அவரை கண்டித்து மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாணாபுரம்,

திருவண்ணாமலையை அடுத்த வாழவச்சனூர் அரசு வேளாண்மை கல்லூரியில் சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இதே கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணிபுரியும் தங்கபாண்டியன் என்பவர் தொடர்ந்து 7 மாதங்களாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த மாணவி புகார் கூறினார்.

மேலும் அந்த மாணவி தங்கியிருந்த விடுதியில் காப்பாளர்களாக இருந்த பேராசிரியைகள் உதவி பேராசிரியர் தங்கபாண்டியனுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் கூறினார். அதுமட்டுமின்றி பேராசிரியைகள் பேசியதாக மாணவி ஆடியோக்களையும் வெளியிட்டார். இதையடுத்து உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பாலியல் புகார் குறித்து திருவண்ணாமலை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா தலைமையிலான போலீசார் மற்றும் கோவை வேளாண் பல்கலைக் கழக ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் சாந்தி தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, சமீபத்தில் திருச்சி நாவலூர் குட்டப்பட்டு பகுதியில் உள்ள அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரிக்கு அந்த மாணவி திடீரென மாற்றப்பட்டார். அதேபோல் பாலியல் புகாரில் சிக்கிய காப்பாளர்களாக இருந்த பேராசிரியைகளில் ஒருவர் திருவள்ளூர் மாவட்டம் திரூர் வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கும், மற்றொருவர் கோவை வேளாண்மை கல்லூரிக்கும் மாற்றப்பட்டனர்.

ஆனால் திருச்சி கல்லூரிக்கு மாற்றப்பட்ட உத்தரவை அந்த மாணவி ஏற்க மறுத்துவிட்டார். நீதி கிடைக்கும் வரை கல்லூரியை விட்டு வெளியேற மாட்டேன் என திட்டவட்டமாக கூறிய மாணவி வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று வருகிறார்.

வகுப்பறைக்குள் மாணவி சென்றவுடன் மற்ற மாணவ, மாணவிகளை அழைத்து கொண்டு பேராசிரியர்கள் வெளியில் சென்றுள்ளனர். அதைத் தொடர்ந்து நேற்று காலை கல்லூரிக்கு சென்ற மாணவிக்கு எதிராக மாணவர்கள், மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி கூறுகையில், “தவறு இழைத்தவர்களை தண்டிக்காமல் என்னை வேறு கல்லூரிக்கு மாற்றுவது எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்களை தப்பிக்க வைக்கும் முயற்சி. நான் திருவண்ணாமலை கல்லூரியில் தான் தொடர்ந்து படிப்பேன். எனக்கு எதிராக போராட்டம் தூண்டி விடப்படுகிறது. சில மாணவர்கள் என்னை கிண்டலடிக்கும் விதமாக ‘கேளடி கண்மணி... வெல்லும் எங்கள் போராட்டம்‘ என கோஷமிடுகின்றனர். இது கண்டிக்கத்தக்க செயல். எனக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவேன். வேறு கல்லூரிக்கு செல்ல மாட்டேன்” என்றார்.

கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் கூறுகையில், “மாணவி அவர் விருப்பம் போல் செயல்படுகின்றார். ஆசிரியர்கள் எதை கூறினாலும் அவர்களிடத்தில் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றார். வகுப்பறைக்கு அவர் விருப்பம் போல் வந்து செல்கின்றார். இதனால் மற்ற மாணவர்கள் சிரமபட வேண்டிய நிலை உள்ளது. மேலும் மாணவி செய்யும் செயல்களை அனைத்தும் எங்கள் மேலதிகாரிகளிடம் தெரிவித்து தான் வருகின்றோம்” என்றார்.

Next Story