4,971 வீட்டுமனைகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்தார்

பெங்களூருவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கெம்பேகவுடா லே-அவுட்டில் 4,971 வீட்டுமனைகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணியை முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்தார்.
பெங்களூரு,
பெங்களூருவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கெம்பேகவுடா லே-அவுட்டில் 4,971 வீட்டுமனைகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணியை முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்தார்.
4,971 வீட்டுமனைகள்
பெங்களூரு வளர்ச்சி ஆணையம் சார்பில் கெம்பேகவுடா லே-அவுட் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. அதில் வீட்டுமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த லே-அவுட்டில் வீட்டுமனை பெற நிர்ணயிக்கப்பட்ட டெபாசிட் தொகையுடன் சுமார் 14 ஆயிரத்து 220 பேர் விண்ணப்பித்தனர். இதில் முதல் கட்டமாக 5,000 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டன. இந்த நிலையில் 2-வது கட்டமாக 4,971 வீட்டுமனைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அந்த வீட்டுமனைகளை குலுக்கல் முறையில் பயனாளிகளுக்கு ஒதுக்கும் பணி தொடக்க விழா நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு வீட்டுமனை ஒதுக்கீட்டு பணியை தொடங்கி வைத்தார். இதில் கலந்துகொண்ட துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ரூ.2,700 கோடி நிதி
கெம்பேகவுடா லே-அவுட்டில் முதல் கட்டமாக இன்று(அதாவது நேற்று) 4,971 வீட்டுமனைகள் குலுக்கல் முறையில் ஒதுக்கப்படுகின்றன. இதில் 20 சதவீத வீட்டுமனைகள் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு ஒதுக்கப்படுகிறது. அவர்களுக்கு 50 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. அந்த லே-அவுட்டில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க ரூ.2,700 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பொதுப்பிரிவில் வீட்டுமனை ஒதுக்கீடு பெறுபவர்கள் அடுத்த 2 மாதங்களுக்குள் பணத்தை செலுத்தி அதன் உரிமையை பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் அந்த தொகைக்கு 18 சதவீத வட்டி செலுத்த வேண்டும். அதற்கான காலக்கெடுவும் முடிவடைந்தால், வட்டி விகிதம் 21 சதவீதமாக உயரும். ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியின பயனாளிகளுக்கு 3 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ரூ.1,400 கோடி கிடைத்துள்ளது
இந்த கெம்பேகவுடா லே-அவுட்டில் வீட்டுமனை கேட்டு மொத்தம் 14 ஆயிரத்து 220 பேர் விண்ணப்பித்துள்ளனர். வீட்டுமனை ஒதுக்கீடு கிடைக்காதவர்களுக்கு ஒரு மாதத்தில் அவர்கள் செலுத்திய டெபாசிட் தொகை அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். தற்போது இந்த வீட்டுமனை ஒதுக்கீடு மூலம் பெங்களூரு வளர்ச்சி ஆணையத்திற்கு ரூ.1,400 கோடி கிடைத்துள்ளது.
பெல்லந்தூர் ஏரியில் மீண்டும் வெள்ளை நுரை பொங்கி இருப்பது குறித்த தகவல் எனது கவனத்திற்கு வந்துள்ளது. முன்பு ஒருமுறை நான் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தேன். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண பட்ஜெட்டில் ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் இந்த செப்டம்பர் மாதத்தில் வழக்கத்தை விட கூடுதல் மழை பெய்துள்ளது. கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் நகரில் சுமார் 300 மரங்கள் முறிந்துவிழுந்துள்ளன. அந்த மரங்களை வெட்டி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மேற்கொள்ள ஒரு சிறப்பு குழுவை அமைத்துள்ளோம்.
குழிகளை மூடுவதில் சிக்கல்
கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவுப்படி சாலை குழிகள் மூடப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போது மழை பெய்வதால், குழிகளை மூடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
நிலம் அளவீடு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலம் அளவீடு செய்யும் ஊழியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். அதனால் தற்காலிக நில அளவீட்டாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.
Related Tags :
Next Story