பாசனத்திற்கு தண்ணீர் வராததை கண்டித்து பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
பாசனத்திற்கு தண்ணீர் வராததை கண்டித்து பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
சிதம்பரம்,
சிதம்பரம் பகுதியில் பாசிமுத்தான் ஓடை உள்ளது. இந்த ஓடைக்கு வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் கீழ் மற்றும் மேல் அணுவம்பட்டு, கோவிலாம்பூண்டி, சிதம்பரநாதன் பேட்டை, கீழமூங்கிலடி, தில்லைநாயகபுரம், பள்ளிபடை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
தற்போது வீராணம் ஏரியில் இருந்து அனைத்து பாசன வாய்க்கால்களிலும் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் பாசிமுத்தான் ஓடையில் மட்டும் இதுவரை தண்ணீர் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், நேற்று காலை கடலூர் மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் ரவீந்திரன் தலைமையில் திருநாவுக்கரசு, வீரபாண்டியன் மற்றும் ஏராளமான விவசாயிகள் சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு ஒன்று திரண்டு வந்து முற்றுகையிட்டனர்.
இவர்களை அழைத்து வீராணம் ஏரி உதவி பொறியாளர் பார்த்திபன், பாசிமுத்தான் ஓடை உதவி பொறியாளர் சிவசங்கரன் மற்றும் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்–இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் நாளைக்குள்(திங்கட்கிழமை) ஓடையில் தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையேற்று அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.