ஊட்டி அருகே மலைப்பாதையில் 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து கப்பல் கேப்டன் உள்பட 5 பேர் பலி , 2 பேர் மீட்பு


ஊட்டி அருகே மலைப்பாதையில் 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து கப்பல் கேப்டன் உள்பட 5 பேர் பலி , 2 பேர் மீட்பு
x
தினத்தந்தி 4 Oct 2018 5:30 AM IST (Updated: 4 Oct 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அருகே கல்லட்டி மலைப்பாதையில் 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து கப்பல் கேப்டன் உள்பட 5 பேர் பலியானார்கள். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய 2 பேர் மீட்கப்பட்டனர்.

மசினகுடி,

தூத்துக்குடி முத்தம்மாள் காலனியை சேர்ந்தவர் ஜூட் ஆன்டோ கெவின் (வயது 34), கப்பல் கேப்டன். இவர் தனது நண்பர்களான சென்னை கொளத்தூர் முதல் மெயின்ரோட்டை சேர்ந்த ராம ராஜேஷ் (36), வியாசர்பாடி இஸ்மாயில் தெரு இப்ராகிம் (35), பெரம்பூர் அருண் (36), வீரபாண்டி தெருவை சேர்ந்த வக்கீல் ரவி வர்மா (39) மற்றும் தொழில் அதிபர்களான பெரம்பூர் செல்வம் நகர் ஜெயக்குமார் (36), பெரம்பூர் அமர்நாத் (35) ஆகியோருடன் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டார்.

அதன்படி அவர்கள் கடந்த 30–ந் தேதி ஒரு காரில் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். அங்கு ஒரு தங்கும் விடுதியில் 7 பேரும் அறை எடுத்து தங்கி இருந்தனர். கடந்த 1–ந் தேதி காலையில் விடுதியில் இருந்து ஊட்டி அருகே உள்ள மசினகுடி பகுதியை சுற்றிப்பார்க்க காரில் புறப்பட்டனர்.

அவர்கள், கல்லட்டி மலைப்பாதையில் புதுமந்து பகுதியில் உள்ள 35–வது கொண்டை ஊசி வளைவில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் உள்ள 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அங்கு 300 அடி பள்ளம் இருந்ததால், அந்த கார் பள்ளத்தில் உருண்டபடி சென்றது.

இதனால் அந்த காருக்குள் இருந்த 7 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். 300 அடி ஆழ பள்ளத்தில் மரங்களுக்குள் கார் விழுந்து கிடந்ததால் கல்லட்டி மலைப்பாதையில் செல்லும் பிற வாகன ஓட்டிகளுக்கும், வேறு யாருக்கும் தெரியவில்லை.

இதற்கிடையே, சுற்றுலாவுக்கு ஊட்டிக்கு சென்றவர்களிடம் இருந்து கடந்த 2 நாட்களாக எந்த பதிலும் இல்லை என்பதால் அவர்களுடைய உறவினர்கள், அவர்களின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் இது குறித்து ஊட்டி போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா உத்தரவின்பேரில் போலீசார் மற்றும் வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

முதுமலை புலிகள் காப்பக வனத்துறை ஊழியர்கள் கல்லட்டி மலைப்பாதையில் நேற்று தேடியபோது அங்கு 300 அடி ஆழ பள்ளத்தில் நொறுங்கி கிடந்த காரை கண்டுபிடித்தனர். இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் அந்த காருக்குள் பார்த்தபோது, ராம ராஜேஷ், அருண் ஆகியோர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர். மற்ற 5 பேரும் படுகாயம் அடைந்ததால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது தெரியவந்தது.

உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்புப்படை வீரர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டனர். அதில் மேல் சிகிச்சைக்காக ராம ராஜேஷ் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கும், அருண் மைசூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

பலியான ஜூட் ஆன்டோ கெவின், இப்ராகிம், ரவி வர்மா, ஜெயக்குமார், அமர்நாத் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து புதுமந்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.


Next Story