கனமழை எச்சரிக்கை எதிரொலி தயார் நிலையில் 17 கண்காணிப்பு குழுக்கள் கலெக்டர் ஷில்பா பேட்டி

கனமழை எச்சரிக்கை எதிரொலியாக, பாதிக்கப்படுபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய நெல்லை மாவட்டம் முழுவதும் 17 கண்காணிப்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளன என்று கலெக்டர் ஷில்பா கூறினார்.
நெல்லை,
கனமழை எச்சரிக்கை எதிரொலியாக, பாதிக்கப்படுபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய நெல்லை மாவட்டம் முழுவதும் 17 கண்காணிப்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளன என்று கலெக்டர் ஷில்பா கூறினார்.
இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–
கனமழை எச்சரிக்கை
நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் தயார்நிலையில் உள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் மிகப்பெரிய அளவிலான கனமழை பெய்யும் என வானிலைத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. இந்த கனமழையால் நெல்லை மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்பாடாமல் இருக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் மிக மிக அதிகமாக மழை பாதிப்பு ஏற்படும் இடங்கள் என ராதாபுரம் தாலுகா பகுதியில் 8 இடங்களும், திசையன்விளை தாலுகா பகுதியில் 3 இடங்களும் கண்டறியப்பட்டு உள்ளன. அதிகமாக மழை பாதிப்பு ஏற்படுகின்ற இடம் என 44 இடங்களும், மிதமான பாதிப்பு ஏற்படும் இடங்கள் என 24 இடங்களும், குறைவான பாதிப்பு ஏற்படும் இடங்கள் என 46 இடங்களும் கண்டறியப்பட்டு உள்ளன. இந்த இடங்களில் உள்ள மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
17 குழுக்கள்
மழையால் பாதிக்கப்படுகின்ற பொதுமக்களை தங்க வைக்க சமுதாய கூடங்கள், பள்ளிக்கூடங்கள் என மொத்தம் 261 இடங்கள் தயார்நிலையில் உள்ளன. கோட்ட அளவில் அனைத்து வசதிகளும் செய்ய உதவி கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. மழையால் பாதிக்கப்படுகின்ற பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க உதவி கலெக்டர்கள், ஊரக வளர்ச்சித்துறை, உள்ளாட்சித்துறை உதவி இயக்குனர்கள் தலைமையில் போலீசார், தீயணைப்புத்துறையினர், வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர், மருத்துவத்துறையினர், சுகாதாரத்துறையினர் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் அடங்கிய குழு தாலுகாவிற்கு ஒரு குழு வீதம் 16 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதுதவிர மாவட்டத்தில் உள்ள உயர் அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவும் சேர்த்து மொத்தம் 17 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் எப்பொழுதும் தயார் நிலையில் இருப்பார்கள். இவர்கள் சேத விவரங்களை சேகரித்து உடனுக்குடன் எனக்கு தகவல் தெரிவிப்பார்கள். உடனுக்குடன் நிவாரணப்பணிகளையும் தாசில்தார்கள் அடங்கிய குழுவினர் செய்வார்கள்.
7 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள்
வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறவர்களை மீட்பதற்கு 913 ஆண்கள், 400 பெண்கள் என மொத்தம் 1,313 முதல்நிலை மீட்பாளர்கள் தயார்நிலையில் உள்ளனர். கடலோர பகுதியில் 7 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 160 நீச்சல் வீரர்கள் படகுகளுடன் தயார்நிலையில் உள்ளனர். இதுதவிர நன்கு பயிற்சி பெற்ற 777 பேரும் மீட்பு பணிக்காக ஆற்றங்கரையோரத்தில் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும் மரங்கள் விழுந்தால் அதை சரிசெய்ய தேவையான பொக்லைன் எந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. நெல்லை மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது. டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் மும்முரமாக பணியாற்றி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், சிரஸ்தார் சிவகுமார், பேரிடர் மேலாண்மை தாசில்தார் திருப்பதி ஆகியோர் உடன் இருந்தனர்.
மழை பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்க
வாட்ஸ்–அப் எண்கள் அறிவிப்பு
மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது அவர்கள் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ள கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 1077 கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் 0462–2501070, 0462–2501012 ஆகிய தொலைபேசி எண்களிலும், 6374001902, 6374013254 ஆகிய வாட்ஸ்–அப் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் மற்றும் தகவல் அனுப்பலாம். மேலும் பல்வேறு பகுதிகளில் மழை பாதிப்பு குறித்து தொடர்பு கொள்ள அறிவிக்கப்பட்டு உள்ள தொலைபேசி மற்றும் வாட்ஸ்–அப் எண்கள் விவரம் வருமாறு:–
தாலுகா அலுவலகம் தொலைபேசி எண் வாட்ஸ்–அப் எண்
நெல்லை 0462–2333169 9894306884
மானூர் 0462–2485100 8270775749
பாளையங்கோட்டை 0462–2501469 6374009290
சங்கரன்கோவில் 04636–226455 8056450670
திருவேங்கடம் 04636–264400 7708089198
தென்காசி 04633–222262 8667480205
செங்கோட்டை 04633–233276 9489526788
கடையநல்லூர் 04633–245666 7305676757
ஆலங்குளம் 04633–271384 7598173976
வீரகேரளம்புதூர் 04633–277140 7397055059
சிவகிரி 04636–250223 9790452342
சேரன்மாதேவி 04634–260007 6381472736
அம்பை 04634–250348 9443416041
நாங்குநேரி 04635–250123 9787084853
ராதாபுரம் 04637–254122 9443581690
திசையன்விளை 04637–271001 8015450649
இந்த தகவலை கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story