திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்ட மணல் குவாரியில் கண்காணிப்பு குழுவினர் மீண்டும் ஆய்வு


திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்ட மணல் குவாரியில் கண்காணிப்பு குழுவினர் மீண்டும் ஆய்வு
x
தினத்தந்தி 6 Oct 2018 10:45 PM GMT (Updated: 6 Oct 2018 6:53 PM GMT)

திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்ட அரசு மணல் குவாரியை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பு குழுவினர் நேற்று மீண்டும் ஆய்வு செய்தனர்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூரில் கொள்ளிடம் ஆற்றில் தமிழக அரசு சார்பில் மீண்டும் மணல் குவாரி அமைக்க கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கின. மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருமானூர் கொள்ளிடம் நீர் ஆதார பாதுகாப்பு குழுவினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இங்கு மணல் குவாரி அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று வக்கீல் முத்துகுமரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை ஆணை பெற்றார்.

இந்நிலையில் தமிழக அரசு தாக்கல் செய்த ஆவணங்கள் அடிப்படையில் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க விதித்த தடையை ரத்து செய்ததுடன் 4 பேர் கொண்ட குழுவை நியமித்து கொள்ளிடம் ஆற்றில் ஆய்வு செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன் மணல் குவாரி தொடங்கப்பட்டது.

அரசு சட்ட விதிகளை மீறி ஆற்றில் மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளதாக கூறி கடந்த சில நாட்களாக பல்வேறு போராட்டங்கள் திருமானூரில் நடந்தன. இதையடுத்து அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் மணல்குவாரியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், அதற்குள் உயர்நீதிமன்றம் அமைத்த ஆய்வுக்குழுவினர் மீண்டும் வரவழைக்கப்பட்டு ஆய்வு பணி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், உயர்நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பு குழுவினை சேர்ந்த கனிமவள திட்ட மேலாளர் அருண்தம்புராஜ், ஐ.ஐ.டி. பேராசிரியர் மோகன், அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த கணபதிவேங்கட சுப்பிரமணியன், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி புகழேந்தி ஆகியோர் நேற்று மதியம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி தொடங்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர்.

அப்போது திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி தொடங்கக் கூடாது என்று வழக்கு தொடர்ந்த வக்கீல் முத்து குமரன் மற்றும் திருமானூரை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்காணிப்பு குழுவினருடன் கரைவெட்டி பறவைகள் சரணாலயம், குடியிருப்புகள், கோவில்கள், கிராம குடிநீர் திட்டம், மயானம் ஆகியவற்றுக்கு மிக அருகே மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்கள்.

இதையடுத்து கண்காணிப்பு குழுவினர் மணல்குவாரியில் இருந்து எத்தனை மீட்டர் தூரம் பொதுமக்கள் கூறிய இடங்கள் உள்ளது என்று அளந்து பார்த்தனர். அந்த ஆய்வு அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று பொதுமக்களிடம் தெரிவிக்கப்பட்டது.

Next Story