ஹைவேவிஸ் மலைக்கிராமங்களில் காட்டுயானைகள் அட்டகாசம் பொதுமக்கள் அச்சம்

ஹைவேவிஸ் மலைக்கிராமங்களில் காட்டுயானைகள் அட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
சின்னமனூர்,
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேகமலை வனவிலங்கு சரணாலயம் உள்ளது. இங்கு ஹைவேவிஸ், மணலாறு, அப்பர், இரவங்கலாறு, மகாராஜாமெட்டு உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதுதவிர விலையுயர்ந்த மரங்களும், கண்களை கொள்ளை கொள்ளும் தேயிலை தோட்டங்களும் உள்ளன. இங்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.
இந்தநிலையில் கடந்த ஒரு வார காலமாக காட்டுயானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. வீடுகளை சேதப்படுத்துவதோடு, விவசாய பயிர்களையும் நாசப்படுத்தி செல்கின்றன. இதுதவிர தோட்ட தொழிலாளர்களையும் தாக்க முயன்ற சம்பவமும் நடந்துள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட மணலாறு எஸ்டேட் பகுதியை சேர்ந்த முத்துமாரி, உபேந்திரன் ஆகியோரின் வீடுகளை காட்டுயானைகள் சேதப்படுத்தின. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இரவு நேரங்களில் வீடுகளில் தங்குவதற்கு கூட பொதுமக்கள் தயங்குகின்றனர். எனவே காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், காட்டுயானைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து செல்லும். அணை, ஓடைகளில் தண்ணீர் குடித்து விட்டு சென்று விடும். ஆனால் பொதுமக்களையோ, வீடுகளையோ இதுவரை தாக்கியது கிடையாது. சமீபகாலமாக தான் இந்த சம்பவங்கள் நடந்து வருகிறது’ என்றனர்.
Related Tags :
Next Story