மகா புஷ்கர விழா தொடங்கியது: தாமிரபரணி ஆற்றில் கவர்னர்- பக்தர்கள் புனித நீராடினர் -


மகா புஷ்கர விழா தொடங்கியது: தாமிரபரணி ஆற்றில் கவர்னர்- பக்தர்கள் புனித நீராடினர் -
x
தினத்தந்தி 11 Oct 2018 10:30 PM GMT (Updated: 11 Oct 2018 7:40 PM GMT)

தாமிரபரணி மகா புஷ்கர விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி பாபநாசம் ஆற்றில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள்.

நெல்லை, 


நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் செல்லும் தாமிரபரணி ஆற்றில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா புஷ்கர விழா நடைபெறுகிறது. அதாவது தாமிரபரணி ஆற்றின் ராசியான விருச்சிக ராசிக்கு குருபகவான் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெயர்ச்சி அடைவதை புஷ்கர விழாவாக கொண்டாடப்படுகிறது. தற்போது 144 ஆண்டுகளுக்கு பிறகு வரும் புஷ்கர விழா என்பதால் மகா புஷ்கர விழாவாக நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள 143 படித்துறைகளிலும், 60-க்கும் மேற்பட்ட தீர்த்தக்கட்டங்களிலும் புஷ்கர விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தாமிரபரணி மகா புஷ்கரத்தின் தொடக்க விழா நேற்று காலை பாபநாசத்தில் கோலாகலமாக நடந்தது. இதற்காக, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், பாபநாசத்துக்கு வந்தார். இதைத்தொடர்ந்து அவர் தாமிரபரணி ஆற்றின் படித்துறைக்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை நடத்தினர். தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் புனித நீராடினார்.

இதைத்தொடர்ந்து பாபநாசத்தில் நடந்த அகில பாரத துறவிகள் சங்கத்தின் மாநாட்டில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு, தாமிரபரணி புஷ்கர விழாவை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் விழா மலரை வெளியிட, சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி பெற்றுக்கொண்டார்.

புஷ்கர விழாவையொட்டி, தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடினர். ஏராளமான துறவிகளும், சாமியார்களும் புனித நீராடினர். வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான சாமியார்கள் வந்து இருந்தனர். இதேபோல், அம்பை, கல்லிடைக்குறிச்சி, சேரன்மாதேவி, அத்தாளநல்லூர், திருப்புடைமருதூர் நாறும்பூநாத சுவாமி கோவில் படித்துறை, நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறை, தைப்பூச மண்டப படித்துறை, குட்டத்துறை படித்துறை, மணிமூர்த்திசுவரம் படித்துறை, எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை ஜடாயுத்துறை, முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், புன்னகாயல் உள்ளிட்ட இடங்களில் தாமிரபரணி புஷ்கர விழா கொண்டாடப்பட்டது.

மாலையில் தாமிரபரணி மகா ஆரத்தி நடந்தது. இதில் தாமிரபரணி அன்னைக்கு ஆரத்தி எடுத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பாபநாசத்தில் சித்தர் கோட்டத்தின் சார்பில் நடக்கின்ற புஷ்கர விழாவையொட்டி சித்தர்கள் மரஉறி உடை அணிந்து பாபநாசம் தலையணையில் இருந்து யானை, குதிரை, பசுமாடுகள் மீது புனிதநீர் எடுத்து மேள தாளம் முழங்க ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலத்தில் அகோரிகள், சிவனடியார்கள், சித்தர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே, ஜடாயு துறையில் கருங்கற்களால் அமைக்கப்பட்டு உள்ள படித்துறையில் தாமிரபரணி மகா புஷ்கர ஆரத்தி பூஜையை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். மேலும் அங்கு வரதராஜ பெருமாள் சுவாமி தலைமையில் தாமிரபரணி அன்னை சிலை, அகஸ்தியர் சிலை ஆகியவையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மகா புஷ்கர விழா வருகிற 23-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை நடைபெறுகிறது. எனவே, நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தாமிரபரணி ஆற்றில் நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி நெல்லைக்கு சிறப்பு ரெயில்களும், பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

Next Story