தூத்துக்குடியில் 6 புதிய பஸ்கள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்


தூத்துக்குடியில் 6 புதிய பஸ்கள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 13 Oct 2018 10:00 PM GMT (Updated: 13 Oct 2018 6:52 PM GMT)

தூத்துக்குடியில் 6 புதிய பஸ்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் 6 புதிய பஸ்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

6 புதிய பஸ்கள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், தூத்துக்குடி பழைய பஸ்நிலையத்தில், 6 புதிய பஸ்கள் தொடக்க விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினாா. தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு புதிய பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரூ.126 கோடியே 80 லட்சம்

தமிழக அரசு, பொதுமக்களின் அடிப்படை தேவைகளை அறிந்து, சிறப்பான முறையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், ரூ.126 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டிலான 471 புதிய பஸ்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

போக்குவரத்துத்துறையில் மாற்றம் ஏற்படுத்தும் வகையில், ஏற்கனவே வழித்தடங்களில் ஓடிக் கொண்டிருந்த பழைய பஸ்கள், புதிய பஸ்களாக மாற்றப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில், திருச்செந்தூரில் இருந்து கோவில்பட்டிக்கும், ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து ராமேசுவரத்திற்கும், திருச்செந்தூரில் இருந்து நெல்லை வழியாக திண்டுக்கல்லுக்கும், தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டி வழியாக ராஜபாளையத்துக்கும், விளாத்திகுளத்தில் இருந்து நெல்லைக்கும், திருச்செந்தூரில் இருந்து வேளாங்கண்ணிக்கும் 6 புதிய பஸ்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பஸ்களில் ஒலிபெருக்கி மூலம் பஸ்கள் நிற்கும் இடம் குறித்து முன்னதாகவே பயணிகளுக்கு தகவல் அளிக்கப்படுகிறது. மேலும், பயணிகளின் நலன் கருதி புதிதாக இயக்கப்பட்ட பஸ்களில் நவீன முறையில் இருக்கை உள்ளிட்ட கூடுதல் வசதிகளை போக்குவரத்து துறை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நவீன வாகனங்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்முறையாக தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை சேகரிப்பதற்காக, தலா ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில், குப்பை உறிஞ்சும் 2 நவீன வாகனங்கள் வாங்கப்பட்டு உள்ளன. அவற்றையும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான்வர்க்கீஸ், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் துரைராஜ், மாவட்ட கோட்ட மேலாளர் கண்ணன், கழக அமைப்பு செயலாளர் சின்னத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story