ரூ.1,264 கோடி நிதி ஒதுக்கப்பட்டது: மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு பிரதமர் விரைவில் அடிக்கல் நாட்டுவார்


ரூ.1,264 கோடி நிதி ஒதுக்கப்பட்டது: மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு பிரதமர் விரைவில் அடிக்கல் நாட்டுவார்
x
தினத்தந்தி 15 Oct 2018 4:45 AM IST (Updated: 15 Oct 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

ரூ.1,264 கோடி நிதி ஒதுக்கப்பட்டு விட்டது. மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு பிரதமர் விரைவில் அடிக்கல் நாட்டுவார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

திருச்சி,

திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையில் ரூ. 6½ கோடியில் அமைக்கப்பட்ட அதி நவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மையம், விபத்து மற்றும் அவசர சிறப்பு பிரிவு வார்டு ஆகியவற்றின் திறப்பு விழா நேற்று நடை பெற்றது. தமிழக சுகாதார துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இவற்றை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திருச்சி அரசு மருத்துவமனையில் திறந்து வைக்கப்பட்டுள்ள ஸ்கேன் மையம் மிகவும் நவீன வசதிகளை கொண்டதாகும். இதனை போன்று தமிழகத்தில் 18 அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டு வருகிறது. சி.டி. ஸ்கேன் மையங்கள் 34 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளது. திருச்சியில் தொடங்கப்பட்டு உள்ள ‘தாய்’ எனப்படும் விபத்து மற்றும் அவசர சிறப்பு சிகிச்சை வார்டில் 11 படுக்கைகள் வெண்டிலேட்டர் வசதியுடன் உள்ளன. ஆஸ்திரேலியா நாட்டின் மருத்துவமனைகளில் இருப்பது போல் இந்த பிரிவு செயல்படும்.

விபத்து காயம், விஷம் குடித்து அனுமதிக்கப்படுபவர்கள், பக்கவாத பாதிப்பு உள்பட அனைத்து நோயாளிகளுக்கும் இங்கு நவீன சிகிச்சை அளிக்கப்படும். திருச்சி அரசு மருத்துவமனையில் இன்னும் ஓரிரு மாதங்களில் ஆஞ்சியோகிராபி, ஆஞ்சியோ பிளாஸ்டி போன்ற இதய சிகிச்சைக்கான ‘கேத்லேப்’ பிரிவு தொடங்கப்படும். தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 15 சதவீதம் குறைந்து இருக்கிறது.

பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அண்டை மாநிலங்கள் மற்றும் வட மாநிலங்களால் சில இடங்களில் பன்றி காய்ச்சலின் தாக்கம் இருந்து வருகிறது. பாளையங்கோட்டையில் ஒரு மருத்துவர் குடும்பத்தில் 4 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மார்க்கெட், பஸ் நிலையம் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இருந்து வீட்டுக்கு வருபவர்கள் தங்களது கைகளை நன்றாக கழுவிக்கொள்ளவேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. பன்றி காய்ச்சல் எனப்படும் ‘ஸ்வைன் புளூ’ கிருமி இதுபோன்ற பருவகால மாற்றங்களில் பரவக்கூடியது தான். இதனை சமாளிக்க மக்கள் நல்வாழ்வு துறையில் 12 லட்சம் மாத்திரைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பொறுத்தவரை எந்த வித தாமதமும் இன்றி அனைத்து பணிகளும் முறையாக நடந்து வருகின்றன. இதற்காக ரூ.1,264 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய மந்திரி கூறி இருக்கிறார். எனவே விரைவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார்.

தமிழகத்தில் மருத்துவ தேர்வு வாரியம் மூலம் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 21 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். 4 ஆயிரம் செவிலியர்கள் நியமிக்க திட்டமிட்டதில் இதுவரை 1000 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். விரைவில் சுகாதார ஆய்வாளர்கள் 1000 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, கலெக்டர் ராஜாமணி, எம்.பி.க்கள் டி. ரத்தினவேல், ப.குமார், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, அரசு மருத்துவ கல்லூரி ‘டீன்’ அனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story