அரசை நிலைகுலைய செய்யவே எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை கூறுகின்றன - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு


அரசை நிலைகுலைய செய்யவே எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை கூறுகின்றன - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு
x
தினத்தந்தி 15 Oct 2018 3:45 AM IST (Updated: 15 Oct 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

அரசை நிலைகுலைய செய்யவே எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை கூறுகின்றன என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் நடராஜன் தலைமை தாங்கினார். மதுரை புறநகர் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா வரவேற்றார். எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், பெரியபுள்ளான், சரவணன் மற்றும் எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், கூட்டுறவு சங்க தலைவர் நிலையூர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு 120 பயனாளிகளுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்களை வழங்கி பேசினார்கள். இதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசும்போது கூறியதாவது:–

ஜெயலலிதாவின் லட்சியம், கொள்கை எள்ளளவும் குறையாமல் மக்களுக்கான அரசு தற்போது நடைபெற்று வருகிறது. நலத்திட்ட உதவிகள் வழங்குவது தேர்தலுக்காக அல்ல. எம்.எல்.ஏ. இல்லாத தொகுதியில் மக்களுக்கு அமைச்சர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்க கூடாது என்ற சட்டம் இல்லையே, எதிர்க்கட்சிகள் எல்லை தாண்டி மக்களுக்கான அரசை நிலைகுலைய செய்ய வேண்டும் என்பதற்காகவே குற்றச்சாட்டுகளை கூறுகின்றன. எங்கள் மீது குற்றம், குறை சொல்லி எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் செல்லும் எதிர்க்கட்சியினர் மக்கள் மன்றத்திற்கு வர தயங்குகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டிய சூழ்நிலை உருவாகவில்லை. அவர் பதவி விலக மாட்டார்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைதொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது, தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி வந்து விடுமோ? என்ற பயத்தில் மு.க.ஸ்டாலின் முதல்–அமைச்சரை பதவி விலக வேண்டும் என்று கூறுகிறார். திண்ணை எப்போது காலியாகும் என்பதிலே மு.க.ஸ்டாலின் குறியாக இருக்கிறார். எதிர்க்கட்சி தலைவர் குறுகிய சிந்தனையுடன் ஊழல் குற்றச்சாட்டை கூறி முதல்–அமைச்சரை பதவி விலக சொல்கிறார். மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். மடியில் கனம் இல்லாத அ.தி.மு.க. அரசை குற்றம் சொல்வது மக்களிடம் எடுபடாது என்றார்.


Next Story