பொள்ளாச்சியில் பரிதாபம் : மகள் காதலனுடன் சென்றதால் பெற்றோர் தற்கொலை


பொள்ளாச்சியில் பரிதாபம் : மகள் காதலனுடன் சென்றதால் பெற்றோர் தற்கொலை
x
தினத்தந்தி 15 Oct 2018 3:00 AM IST (Updated: 15 Oct 2018 4:14 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் மகள் காதலனுடன் சென்றதால் பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பொள்ளாச்சி, 


கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கஸ்தூரி நகரை சேர்ந்தவர் அகத்தூர் சாமி (வயது 63), விவசாயி. இவரது மனைவி சொர்ணலதா (50), இவர்களுடைய மகள் சிநேகா (23). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிவகாசியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த சிநேகாவின் பெற்றோர் அவரை கடுமையாக கண்டித்ததுடன் அவரது படிப்பை சிவகாசியில் இருந்து கோவையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரிக்கு மாற்றினர்.

இந்தநிலையில், கல்லூரி படிப்பை முடித்த சிநேகா தான் காதலித்து வந்த வாலிபரை திருமணம் செய்து கொள்வதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதற்கு அவர்கள் மீண்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, சொந்தத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை ஏற்க மறுத்த சிநேகா தான் காதலித்த வாலிபரையே திருமணம் செய்து கொள்வதாக கூறி நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

தன் ஒரே மகள் காதல் திருமணம் செய்து கொள்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியதால் மனமுடைந்த அகத்தூர் சாமி, சொர்ண லதா ஆகியோர் நேற்று முன்தினம் மாலை விஷத்தை சாப்பிட்டனர். இதுகுறித்த தகவலை சொர்ணலதா அங்கலகுறிச்சியில் உள்ள அகத்தூர் சாமியின் சகோதரி தனலட்சுமிக்கு போனில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, வீட்டில் மயங்கிய நிலையில் இருந்த 2 பேரையும் அவர்களது உறவினர்கள் மற்றும் அக்கம், பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு, இரவு 7 மணியளவில் அகத்தூர் சாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சொர்ணலதா கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சொர்ணலதாவும் நேற்று அதிகாலை இறந்தார். இந்த சம்பவம் குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மகள் காதல் விவகாரத்தில் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story