வண்டலூர் பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்காக 7 வகை பறவையினங்கள்

வண்டலூர் பூங்காவில் பொதுமக்களின் பார்வைக்கு புதிதாக 7 வகை பறவையினங்கள் விடப்பட்டுள்ளன.
வண்டலூர்,
வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
வண்டலூர் பூங்காவில் பொதுமக்களின் பார்வைக்கு புதிதாக 7 வகை பறவையினங்கள் விடப்பட்டுள்ளன. ஸ்கார்லெட் பஞ்சவர்ண கிளி, கேட்டிலைனா பஞ்சவர்ண கிளி, ஹர்லிகுயின் பஞ்சவர்ண கிளி, சீவர் பஞ்சவர்ண கிளி, டஸ்கீ பாய்னஸ், ரூபெல்ஸ் கிளி, அமேசான் ஆரஞ்ச் இறகு கிளி ஆகிய இந்த பறவைகள் பொதுவாக மத்திய மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் காணப்படுபவையாகும்.
இந்த புதிய பறவையினங்கள் சென்னையில் மீட்கப்பட்டு பின்னர் கால்நடை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த பறவைகள் நல்ல ஆரோக்கியமான நிலைக்கு வந்ததால் பார்வையாளர்களின் பார்வைக்கு விடப்பட்டுள்ளன. இந்த பறவைகளின் வண்ணமிகு நிறங்கள் மற்றும் தனித்துவமான குரலின் மூலம் அதிக பார்வையாளர்களை ஈர்க்க கூடியதாக உள்ளது. பூங்காவில் ஏற்கனவே 89 வகையான பறவை இனங்கள் உள்ளன.
அதில் உள்ளூர் பறவையினம் 61 மற்றும் அயல்நாட்டு பறவையினங்கள் 28 என மொத்தம் 1,604 எண்ணிக்கையில் பறவைகள் உள்ளன. பூங்காவின் திறன்மிக்க விஞ்ஞான மேலாண்மை காரணமாக இந்த பறவைகள் நல்ல முறையில் இனப்பெருக்கம் செய்து வருகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.