மாவட்டத்தில் போலீசார் தீவிர சோதனை: குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 116 பேர் கைது


மாவட்டத்தில் போலீசார் தீவிர சோதனை: குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 116 பேர் கைது
x
தினத்தந்தி 21 Oct 2018 3:00 AM IST (Updated: 21 Oct 2018 1:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள். இதில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 116 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று மாலை வரை போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

மாவட்டம் முழுவதும் அனைத்து சோதனைச்சாவடிகள் மற்றும் முக்கிய இடங்களில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மேற்பார்வையில் அந்தந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் ஏராளமான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின்போது சாராயம் மற்றும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 10 பெண்கள் உள்பட 76 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான இவர்களிடம் இருந்து ஒரு ஆட்டோ, 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 1,700 லிட்டர் சாராயம், 703 மதுபாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதுதவிர மணல் கடத்தல், லாட்டரி சீட்டு விற்பனை, பணம் வைத்து சூதாட்டம், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தல், புதுப்பட சி.டி.க்களை திருட்டுத்தனமாக விற்பனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story