வீரவணக்க நாள்: ஊட்டியில் படுகர் இன நடனம் ஆடிய போலீசார்

காவலர்களின் வீரவணக்க நாளையொட்டி ஊட்டியில் பள்ளி மாணவிகளுடன் போலீசார் படுகர் இன நடனம் ஆடினார்கள்.
ஊட்டி,
நாடு முழுவதும் பணியின்போது வீர, தீர செயல் புரிந்து மரணம் அடைந்த காவலர்களுக்காக ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21-ந் தேதி வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும். இதையொட்டி காவலர்களின் வீர மரணம் பற்றி இளம் தலைமுறையினர் மற்றும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழகம் முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்த டி.ஜி.பி. உத்தரவிட்டார்.
அதன்படி நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா மேற்பார்வையில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் போலீசார் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கடந்த வாரம் பேண்ட் வாத்திய நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் மூலம் பூங்காவுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளுக்கு காவலர்களின் வீரம் மற்றும் தியாகம் குறித்து எடுத்துக்கூறப் பட்டது.
அதன் ஒரு பகுதியாக போலீசாரின் தியாகங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பாரம்பரிய நடனம் மற்றும் இன்னிசை நிகழ்ச்சி ஊட்டியில் உள்ள சிறுவர் மன்ற அரங்கில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா தலைமை தாங்கி பேசியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் வீரவணக்க நாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் போலீசார் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போலீசார் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் திறமைகளை அறிய ஒரு வாய்ப்பாக அமைந்து உள்ளது. காவலர் குடும்பத்தின் குழந்தைகள் பாடல் பாடியும், நடனமாடி அசத்துவதும் பிரமிக்க வைக்கிறது. காவலர் குடும்பத்தின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் வருகிற டிசம்பர் மாதம் தனி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
முக்கிய பண்டிகை நாட்களில் ஊட்டிக்கு வரும் அதிகமான சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக திருப்பி அனுப்பும் வகையில் காவலர்கள் பணியில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் குளிர், மழை என்று பார்க்காமல் பணி செய்கின்றனர். மேலும் அனைத்து பகுதிகளிலும் இரவு நேரங்களில் ரோந்து, கண்காணிப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கை பாதுகாத்தல் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். தங்களது குடும்ப விசேஷ நிகழ்ச்சியில் அதிக நேரம் பங்கேற்காமல் கடமை உணர்வுடன் பாதுகாப்பு பணியை ஆற்றுகிறார்கள். எனவே போலீசாரின் வீரத்தையும், தியாகங்களையும் நினைவுகூர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகளுடன் இணைந்து போலீசார் படுகர் உடையணிந்து பாரம்பரிய படுகர் இன நடனம் ஆடினார்கள். அதனை தொடர்ந்து காவலர் குடும்பத்தை சேர்ந்த பள்ளி மாணவியின் நடனம், இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சங்கு, ரவிக்குமார், திருமேனி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
Related Tags :
Next Story