வாழப்பாடி அருகே ரெயில்வே மேம்பாலம், சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


வாழப்பாடி அருகே ரெயில்வே மேம்பாலம், சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 23 Oct 2018 4:00 AM IST (Updated: 23 Oct 2018 1:05 AM IST)
t-max-icont-min-icon

வாழப்பாடி அருகே ரெயில்வே மேம்பாலம், சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள எம்.பெருமாபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் ரோகிணியை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

எங்கள் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் நடுவே தண்டவாளம் செல்வதால் குழந்தைகள், பெண்கள் கல்விக்காகவும், மருத்துவ சிகிச்சைக்காவும், தினக்கூலிக்காகவும் மற்றும் இதர பணிகளுக்காகவும் தினசரி இந்த தண்டவாளத்தை கடந்து செல்ல வேண்டியுள்ளது.

இதேபோல பள்ளி, கல்லூரி வாகனங்கள், அவசர காலத்திற்கு வரும் ஆம்புலன்ஸ், விவசாய தொழில் சம்பந்தமான வண்டிகள் தண்டவாளத்தை கடந்து செல்ல வேண்டி இருக்கிறது. இந்த இடத்தில் அடிக்கடி ரெயில்கள் வருவதாலும், ரெயில்வே மேம்பாலம், சுரங்கப்பாதை இல்லாத காரணத்தினாலும் வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரம் கூடுதலாக சுற்றி வரவேண்டி உள்ளது.

இதனால் கால விரயம், கூடுதலான வாகன எரிபொருள் செலவு ஏற்படுவதோடு, சிலசமயங்களில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு கூட ஏற்படுகிறது. ஆகையால் குழந்தைகள், முதியோர், பெண்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்குமான பாதுகாப்பை கருத்தில் கொண்டு சேலம்-விருத்தாசலம் மார்க்கத்தில் மின்னாம்பள்ளி, ஏத்தாப்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையில் ரெயில்வே மேம்பாலம், சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும்.

இந்த மேம்பாலம், சுரங்கபாதை அமையும் பட்சத்தில் தண்டவாளத்தின் இருபுறமும் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பான முறையில் அன்றாட தேவைகளுக்கான போக்குவரத்து அமையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Next Story