ஊட்டியில் மரம் வெட்டும் போது பரிதாபம் மரக்கிளை முறிந்து விழுந்து தொழிலாளி சாவு


ஊட்டியில் மரம் வெட்டும் போது பரிதாபம் மரக்கிளை முறிந்து விழுந்து தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 24 Oct 2018 4:15 AM IST (Updated: 24 Oct 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் மரங்களை வெட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி ஒருவர் மரக்கிளை முறிந்து விழுந்து பரிதாபமாக இறந்தார்.

ஊட்டி,

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் சுமார் 2 ஆயிரம் மாணவ– மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரி வளாகத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த கற்பூர மரங்கள் அதிகளவு உள்ளன. பருவமழைக்காலத்தில் மரங்கள் சரிந்து கல்லூரி கட்டிடங்கள் மற்றும் மாணவர்கள் மீது விழும் அபாயம் உள்ளதாக புகார் எழுந்தது. இதனால் ஆபத்தான மரங்களை வெட்ட அனுமதி அளிக்க வேண்டும் என வருவாய்த்துறையிடம் கல்லூரி நிர்வாகம் கேட்டு கொண்டது.

இதைத்தொடர்ந்து ஆபத்தான மரங்களை வெட்ட கடந்த 1 மாதத்துக்கு முன்பு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்களை வெட்டும் பணியும் உடனடியாக தொடங்கப்பட்டது. இப்பணியில் 10–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு மரம் ஒன்றை வெட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

இதற்காக மரத்தில் உள்ள ராட்சத கிளைகளை ஒவ்வொன்றாக அறுக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது கல்லூரி கட்டிடத்தின் மீது ராட்சத கிளை விழாமல் இருக்க தொழிலாளர்கள் கயிறு கட்டி இழுத்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக தொழிலாளர்கள் நின்ற பகுதியில் ராட்சத கிளை வந்து விழுந்தது. இதை கண்ட தொழிலாளர்கள் அங்கிருந்து ஓட முயன்றனர். ஆனால் அவர்கள் நின்ற பகுதியில் புதர்கள் நிறைந்து இருந்ததால் வேகமாக ஓட முடிய வில்லை.

இதனால் பலர் கீழே விழுந்தனர். மேலும் ராட்சத கிளையும் வேகமாக விழுந்தது. அப்போது மரக்கிளையின் அடியில் கீழ்குந்தா பகுதியை சேர்ந்த தொழிலாளி சசி (வயது 47) என்பவர் சிக்கி பலத்த காயம் அடைந்தார். இதை கண்ட தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மரக்கிளையின் அடியில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சசியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் சம்பவ இடத்திலேயே சசி பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்த ஊட்டி பி–1 போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இது குறித்து ஊட்டி பி–1 போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆபத்தான மரங்களை வெட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி ஒருவர் மரக்கிளை முறிந்து விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பையும், பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story