வேலைக்கு செல்லும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர்: விண்ணப்பிக்க 31-ந்தேதி கடைசி


வேலைக்கு செல்லும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர்: விண்ணப்பிக்க 31-ந்தேதி கடைசி
x
தினத்தந்தி 24 Oct 2018 10:00 PM GMT (Updated: 24 Oct 2018 8:31 PM GMT)

வேலைக்கு செல்லும் மாற்றுத்திறனாளி பெண்கள் மானிய விலையில் ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல், 

தமிழக அரசு அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கி வருகிறது. இதில் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு ஸ்கூட்டர் வாங்க ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டது. தற்போது, வேலைக்கு செல்லும் மாற்றுத்திறனாளி பெண்கள் ஸ்கூட்டர் வாங்குவதற்கான மானியத்தொகை ரூ.31 ஆயிரத்து 250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பணிபுரியும் மாற்றுத்திறனாளி பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

அவர்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகம் ஆகியவற்றில் விண்ணப்பங்களை பெற்று சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க வருகிற 31-ந்தேதி கடைசி நாள் ஆகும். இதற்கு தகுதி உடைய பெண்கள் 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்குள் இருக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவர் மட்டுமே ஸ்கூட்டர் பெற முடியும்.

விண்ணப்பத்துடன் வயது சான்று, இருப்பிட சான்று, ஓட்டுனர் உரிமம், வருமான சான்று, கல்வி சான்று, புகைப்படம், முன்னுரிமை சான்று, சாதிச்சான்று, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, பணிபுரியும் நிறுவனத்திடம் பெற்ற வேலை செய்வதற்கான சான்று, ஸ்கூட்டரின் விலைப்புள்ளி ஆகியவற்றின் நகல் களை இணைக்க வேண்டும்.

பதிவு பெற்ற, பதிவு பெறாத நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், அரசு நலத்திட்டங்கள், சமுதாய அமைப்புகள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், மாவட்ட மக்கள் கற்றல் மையம் ஆகியவற்றில் தொகுப்பூதியம், தினக்கூலி, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்கள், சுயதொழில் செய்வோர், வங்கி ஒருங்கிணைப்பாளர்கள், வங்கி வழிநடத்துனர்கள், சமூக சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியுடையவர்கள் ஆவர்.

வாங்கும் ஸ்கூட்டர் 1.1.2018-க்கு பின்னர் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். 125 சிசி-க்கு மிகாமலும், கியர் இல்லாமல் அல்லது தானியங்கி கியர் ஸ்கூட்டராக இருக்க வேண்டும். ஸ்கூட்டர் வாங்கிய பின்னர் மானியம் கோரி படிவத்தை சமர்ப்பிக்கும்போது, ஓட்டுனர் உரிமத்தையும் உடன் இணைக்க வேண்டும். வேலைக்கு செல்லும் மாற்றுத்திறனாளி பெண்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.

Next Story