கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல்

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் நேற்று தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
தூத்துக்குடி,
சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம், சமையலர் மற்றும் உதவியாளருக்கு ரூ.3 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மானியத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
அதன்படி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இருந்து சத்துணவு ஊழியர்கள் கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு திரண்டனர். இதை தொடர்ந்து கலெக்டர் அலுவலக நுழைவு வாயில்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தொடர்ந்து சத்துணவு ஊழியர்கள் தனியாக சுற்றுச்சுவர் கட்டப்பட்டு உள்ள கலெக்டர் அலுவலக உள்வளாகத்திற்குள் சென்று போராட்டம் நடத்த அனுமதி கேட்டனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். அதே நேரத்தில் வேறு இடத்தில் நடத்திக் கொள்ள போலீசார் அனுமதித்தனர். ஆனால் சத்துணவு ஊழியர்கள் கலெக்டர் அலுவலகம் உள்பகுதியில் போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து தாசில்தார் சிவகாமிசுந்தரி, புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் ஆகியோர் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். போராட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் பாக்கியசீலி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பொன்சேகர் கோரிக்கையை விளக்கி பேசினார். மாநில துணைத்தலைவர் தமிழரசன், மாநில செயலாளர் பெரியசாமி, தமிழ்நாடுஅரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் பேசினர். இந்த போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து திரளான சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story