தனுஷ்கோடி நடுக்கடலில் புதிதாக உருவான மணல் திட்டு; சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்
கடல் நீரோட்ட மாற்றத்தால் தனுஷ்கோடி நடுக்கடலில் புதிதாக உருவான மணல் திட்டுகளை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை. இதேபோல் தனுஷ்கோடிக்கும்–இலங்கைக்கும் இடையில் உள்ள கடல் பகுதிகளில் மொத்தம் 13 மணல் திட்டுகள் உள்ளன. இதில் இந்திய எல்லை பகுதியானது 5–வது மணல் திட்டுடன் முடிவடைந்து விடுகிறது. அதன் பின்பு இலங்கை கடல் எல்லை ஆரம்பித்து விடும்.
தனுஷ்கோடி நடுக்கடல் பகுதியில் இந்த மணல் திட்டுகள் பகல் முழுவதும் கடல் நீர் வற்றிய நிலையிலும், இரவு நேரங்களில் கடல் நீர் சூழ்ந்தும் காணப்படுவது வழக்கம். தமிழக கடல் பகுதிகளிலேயே கடல் சீற்றம், கடல் நீரோட்டம் அதிகமாக உள்ள கடல் பகுதி தனுஷ்கோடி கடல் பகுதி தான். மேலும் ராமேசுவரம், தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதியில் தான் 2 கடலான வங்காள விரிகுடாவும், இந்திய பெருங்கடலும் இணையும் இடமாகும். இதுவே அரிச்சல்முனை கடற்கரையின் சிறப்பம்சம்.
இந்தநிலையில் தனுஷ்கோடி பகுதியில் நேற்று வழக்கத்திற்கு மாறாக கடல் கொந்தளிப்பாக இருந்ததுடன், கடல் நீரோட்டமும் அதிகமாகவே இருந்தது. இதனால் அரிச்சல் முனை கடற்கரை அருகே தென் கடலான மன்னார் வளைகு£ கடல் பகுதியில் நேற்று புதிதாக ஒரு மணல் திட்டு உருவாகியுள்ளது. புதிதாக உருவாகியுள்ள அந்த மணல் திட்டில் ஆயிரக்கணக்கான கடல் புறாக்கள் குவிந்தப்படி ஓய்வெடுத்து வருவதுடன் கடலில் உள்ள மீன்களை இரை தேடியபடி பறந்து வருகின்றன. அரிச்சல்முனை கடற்கரை அருகே நடுக்கடலில் புதிதாக உருவாகியுள்ள மணல் திட்டையும், அங்கு குவிந்த பறவைகளையும் சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்து சென்றனர்.