ஒகி புயலால் மாயமான 15 மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.1½ கோடி நிவாரணம் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்


ஒகி புயலால் மாயமான 15 மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.1½ கோடி நிவாரணம் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்
x
தினத்தந்தி 28 Oct 2018 4:30 AM IST (Updated: 28 Oct 2018 2:42 AM IST)
t-max-icont-min-icon

ஒகி புயலால் மாயமான 15 மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.1½ கோடி நிவாரண உதவியை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.

நாகப்பட்டினம்,
ஒகி புயலால் கடல் சீற்றத்தில் சிக்கி நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 15 பேர் மாயமானார்கள். மாயமான மீனவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசின் நிவாரண உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் தலைமை தாங்கினார். அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டு 15 மீனவர்களின் குடும்பத்திற்கு (வைப்பு நிதியை தவிர்த்து) தலா ரூ.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ.1 கோடியே 50 லட்சம் நிவாரண உதவிக்கான காசோலையை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாகை நம்பியார்நகர் மீனவ கிராமத்தை சேர்ந்த 11 மீனவர்கள் மற்றும் பூம்புகார், திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தை சேர்ந்த 4 மீனவர்கள் கடந்த 2017-ம் ஆண்டு (நவம்பர்) மாதம் 11-ந்தேதி ஏற்பட்ட ஒகி புயலால் ஏற்பட்ட கடல் சீற்றத்தில் சிக்கி கரை திரும்பவில்லை. ஒகி புயலில் மாயமான நாகை மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன், பிரதாபன், ஜெகன், தர்மசீலன், விஜய், கவிந்தன், இனியன், வினிதன், மாதவன், விமல்ராஜ், மதன், சங்கீதவேல், வெற்றிச்செல்வன், கவிமணி, ராஜேஷ் ஆகிய 15 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணமாக வழங்க தமிழக அரசு ஆணை வழங்கியது.

இதில் தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலை மற்றும் ரூ.10 லட்சத்திற்கான வைப்புநிதியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த (மார்ச்) மாதம் மீனவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கினார். ஒகி புயலால் மாயமான 15 மீனவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசால் வழங்கப்பட்டு வைப்பு நிதியாக உள்ள ரூ.10 லட்சத்தை விடுவித்து நிவாரண தொகையாக மொத்தம் ரூ.1 கோடியே 50 லட்சத்திற்கான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பவுன்ராஜ் எம்.எல்.ஏ., சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித்தலைவர் தங்க.கதிரவன், மீன்வளத்துறை இணை இயக்குனர் அமல்சேவியர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story