தறிகெட்டு ஓடிய ஆம்புலன்ஸ், டேங்கர் லாரி மீது மோதியது: நோயாளி உள்பட 3 பேர் சாவு மூவர் படுகாயம்

தறிகெட்டு ஓடிய ஆம்புலன்ஸ், டேங்கர் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் நோயாளி உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மங்களூரு,
தறிகெட்டு ஓடிய ஆம்புலன்ஸ், டேங்கர் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் நோயாளி உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். பெண் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
3 பேர் சாவு
உடுப்பி அருகே கோட்டா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மானூரு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நெடுஞ்சாலையில் நேற்று காலை சென்று கொண்டு இருந்த ஒரு ஆம்புலன்ஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. மேலும் சாலை தடுப்பு சுவர் மீது ஏறி, மறுபுறம் உள்ள சாலைக்கு சென்றது. அப்போது அந்த வழியாக வந்த டேங்கர் லாரி மீது, ஆம்புலன்ஸ் பயங்கர வேகத்தில் மோதியது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் முற்றிலும் உருக்குலைந்து போனது.
விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக கோட்டா போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆம்புலன்சில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது 3 பேர் உடல்நசுங்கி இறந்தது தெரியவந்தது. மேலும் ஒரு பெண் உள்பட 3 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்கள். அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சிகிச்சைக்கு அனுமதிக்க....
இதன்பின்னர் விபத்தில் பலியான 3 பேரின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கார்வாரை சேர்ந்த சைலேஷ்(வயது 39), அசோக் ஐஸ்ரம்(37), உல்லாஷ்(48) என்பது தெரியவந்தது. காயம் அடைந்தது ஆம்புலன்ஸ் டிரைவர் உள்பட 3 பேர் என்பது தெரியவந்தது.
மேற்கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து போன உல்லாசுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க அவரது உறவினர்கள் அழைத்து சென்றதும், அப்போது ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கி உல்லாஷ் உள்பட 3 பேர் இறந்ததும் தெரியவந்தது. இதன்பின்னர் அவர்கள் 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கோட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
டேங்கர் லாரி மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் நோயாளி உள்பட 3 பேர் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story