கோட்டக்குப்பம் அருகே: கடலில் மூழ்கிய காதல் ஜோடி - தேடும் பணியில் போலீஸ் தீவிரம்
கோட்டக்குப்பம் அருகே கடலில் மூழ்கிய காதல் ஜோடியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வானூர்,
கோட்டக்குப்பம் அருகே தமிழக பகுதியான பெரிய முதலியார்சாவடி, சின்னமுதலியார்சாவடி, ஆரோவில் பகுதியில் ஏராளமான கடற்கரை விடுதிகள் உள்ளன. இங்கு விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் வந்து தங்கியிருந்து, புதுவையில் உள்ள பல்வேறு சுற்றுலா இடங்களை பார்வையிட்டு செல்கின்றனர்.
நேற்று மதியம் சின்னமுதலியார்சாவடி கடற்கரைக்கு மோட்டார் சைக்கிளில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு வாலிபரும், இளம் பெண்ணும் வந்தனர். அவர்கள் தங்கள் உடைமைகளை கடற்கரையில் வைத்துவிட்டு கடலில் இறங்கி உற்சாகமாக குளித்தனர். அப்போது கடலில் எழுந்த ராட்சத அலை அவர்களை இழுத்துச்சென்றது.
இதை பார்த்த அங்கிருந்த மீனவர்கள் மற்றும் மற்ற சுற்றுலா பயணிகள் கடலில் மூழ்கியவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோட்டக்குப்பம் போலீசார் விரைந்து வந்து படகில் சென்று அவர்களை தேடினார்கள். ஆனால் அவர்கள் இருவரையும் மீட்க முடியவில்லை. அவர்கள் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை.
அவர்கள் கொண்டு வந்த பை கடற்கரையில் இருந்தது. அதனை போலீசார் சோதித்து பார்த்தபோது அடையாள அட்டைகள், செல்போன்கள் இருந்தன. அந்த வாலிபர் டெல்லியை சேர்ந்த அன்சுன் அவாஸ்கி (வயது 21) என்பதும், அந்த பெண் எனாத்சி வாலியா (21) என்பதும் தெரியவந்தது. எனாத்சி வாலியா ஓய்வுபெற்ற விமான அதிகாரியின் மகள் ஆவார். இவர்கள் இருவரும் பெங்களூருவில் உள்ள கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருகின்றனர். இருவரும் காதலர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தீபாவளி பண்டிகை விடுமுறையை கொண்டாட இருவரும் கடந்த 4-ந் தேதி புதுவைக்கு வந்தனர். புதுவையின் பல்வேறு சுற்றுலா இடங்களை பார்த்துவிட்டு கோட்டக்குப்பத்தில் உள்ள ஒரு விடுதியில் அவர்கள் தங்கியுள்ளனர். நேற்று புதுவையில் வாடகைக்கு மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு சின்ன முதலியார்சாவடி கடற்கரைக்கு வந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
அவர்களின் கை பையில் இருந்த செல்போனை சோதனை செய்தபோது, கடைசியாக இருவரும் கடற்கரையில் இருந்து செல்பி எடுத்துள்ளனர். அவர்கள் பற்றிய தகவல்களை டெல்லியில் உள்ள உறவினர்களுக்கு போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடலில் மூழ்கிய அன்சுன் அவாஸ்கி, எனாத்சி வாலியா ஆகியோரை தேடும் பணியில் போலீசார் மற்றும் மீனவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story