ஆரோக்கியமான சமூகம் உருவாக டாக்டர்கள் பாடுபட வேண்டும் - கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு


ஆரோக்கியமான சமூகம் உருவாக டாக்டர்கள் பாடுபட வேண்டும் - கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு
x
தினத்தந்தி 11 Nov 2018 4:30 AM IST (Updated: 11 Nov 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

“ஆரோக்கியமான சமூகம் உருவாக டாக்டர்கள் பாடுபட வேண்டும்“ என்று வேலம்மாள் அறக்கட்டளை சார்பில் நடந்த விருது வழங்கும் விழாவில் கவர்னர் பன்வாரிலால் பேசினார்.

மதுரை,

மதுரை வேலம்மாள் அறக்கட்டளை சார்பில் இளம் மருத்துவ கண்டுபிடிப்பாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி அங்குள்ள மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. அறக்கட்டளையின் நிறுவனர் எம்.வி.முத்துராமலிங்கம் வரவேற்று பேசினார்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்ததுடன், மருத்துவ கண்டுபிடிப்புகளை உருவாக்கி சாதனை படைத்த 3 இளம் டாக்டர்களுக்கு விருதுகளையும், ரொக்கப்பரிசுகளையும் வழங்கினார்.

முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் குஜராத்தை சேர்ந்த டாக்டர் மணீஷ் ஆர்.ஷாவுக்கு வழங்கப்பட்டது. 2–வது பரிசு ரூ.75 ஆயிரம் மனிபால் மருத்துவ பல்கலைக்கழக டாக்டர் அனில்பட்டுக்கு வழங்கப்பட்டது. 3–வது பரிசு ரூ.50 ஆயிரம் வேலூர் சி.எம்.சி. மருத்துவக்கல்லூரி டாக்டர் தருண் ஜேக்கப்புக்கு வழங்கப்பட்டது.

விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:–

இந்தியா மருத்துவ துறையில் சிறந்து விளங்கி வருகிறது. மதுரை நகர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமைக்குரியது. அதே நேரத்தில் மருத்துவத்திலும் மதுரை சாதனை படைத்து வருகிறது. வேலம்மாள் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, மருத்துவத்துறையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிய இளம் சாதனையாளர்களுக்கு விருது வழங்குவது பாராட்டுக்குரியது.

இதேபோல, ஏழை எளிய மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும். இந்திய நாகரிகம் என்பது 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலானது. வேத, புராண காலங்களிலேயே இந்தியா மருத்துவ வளர்ச்சி பெற்றிருந்ததை அறியலாம். மருத்துவ துறையில் தமிழகமும் முன்னணியில் உள்ளது. மருத்துவ சிகிச்சையின் மையமாக தமிழகம் விளங்குகிறது.

ஆண்டுக்கு 15 லட்சம் பேர் தமிழகத்துக்கு மருத்துவ சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். டாக்டர்கள் எளிமையாக வாழப்பழக வேண்டும். மகாத்மா காந்தி போல், நமது தேவைகளை பிறரை எதிர்பார்க்காமல் நாமே நிறைவேற்றிக்கொள்ள பழக வேண்டும். தமிழகத்தின் நகர்ப்புறங்களில் 68 சதவீதம் பேரும், கிராமப்புறங்களில் 58 சதவீதம் பேரும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல, நகர்ப்புறங்களில் 32 சதவீதம் பேரும், கிராமப்புறங்களில் 42 சதவீதம் பேரும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மத்திய அரசின் காப்பீட்டு திட்டம் எளியோருக்கும், நோயினால் கடுமையாக பாதிக்கப்படுபவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதன் மூலம் தனியார் ஆஸ்பத்திரிகளில் வழங்கப்படும் தரமான சிகிச்சைகளை இலவசமாக பெற முடியும்.

நாட்டில் 55 சதவீத பெண்கள் ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை, எளிய மக்களின் மருத்துவ சிகிச்சைக்காக புதிய கண்டுபிடிப்புகள் அவசியமாகிறது. நமது பொது எதிரியாக நோய்கள்தான் உள்ளன. இந்திய பாரம்பரிய மருத்துவ சிகிச்சை டாக்டர்கள் மற்றும் அலோபதி டாக்டர்கள் இணைந்து ஆரோக்கியமான சமூகம் உருவாக பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, ஜெம் ஆஸ்பத்திரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் பழனிவேலு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். அப்போது, ‘தமிழகம் மருத்துவ சுற்றுலா மற்றும் மருத்துவ சிசிச்சையின் இருதயமாக விளங்குகிறது. கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ள டாக்டர்களுக்கு இணையான திறமை படைத்த டாக்டர்கள் நமது நாட்டிலும் நிறைய பேர் உண்டு. ஸ்பானிஷ் மொழியில் எழுதப்பட்ட மருத்துவ அறுவை சிகிச்சை குறித்த புத்தகத்தின் முதல் பக்கத்தில், வேதங்களில் கூறப்படும் சுஸ்ருதா படம் இடம்பெற்றுள்ளது இந்தியாவுக்கு கிடைத்த பெருமையாகும்“ என்று பேசினர். முடிவில், வேலம்மாள் மருத்துவக்கல்லூரி டீன் ராஜா முத்தையா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கலெக்டர் நடராஜன் மற்றும் டாக்டர்கள், மாணவ–மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story