3 மாவட்ட பாசனத்துக்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு - வினாடிக்கு 4,650 கனஅடி நீர் வெளியேற்றம்


3 மாவட்ட பாசனத்துக்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு - வினாடிக்கு 4,650 கனஅடி நீர் வெளியேற்றம்
x
தினத்தந்தி 15 Nov 2018 5:00 AM IST (Updated: 15 Nov 2018 4:06 AM IST)
t-max-icont-min-icon

மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 4 ஆயிரத்து 650 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீர், பாசன ஆதாரமாக இந்த அணை திகழ்கிறது. 71 அடி உயரம் கொண்ட அணையின் முழு கொள்ளளவாக 69 அடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த மாதம் 21-ந்தேதி அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியது. இதனையடுத்து அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது. ஏற்கனவே அணையில் இருந்து மதுரை, திருமங்கலம், மேலூர் பகுதிகளின் விவசாயத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் தொடர்ந்து நீர்வரத்து இருந்ததால் 20 நாட்களுக்கும் மேலாக அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவில் நீடித்தது.

இந்தநிலையில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள குளங்களில் தண்ணீரை தேக்கி வைத்து பாசனத்துக்கு பயன்படுத்தும் வகையில், வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி 5 குளங்களில் தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் வைகை ஆறு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் பட்டனை அழுத்தி மதகை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பெரியாறு வைகை வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் அன்பரசு, செயற்பொறியாளர் சுப்பிரமணி, வைகை அணை உதவி செயற்பொறியாளர் செல்வம் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நேற்று முதல் வருகிற 30-ந்தேதி வரை வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. வைகை அணையில் இருந்து ஏற்கனவே 1,650 கன அடி வீதம் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது, கூடுதலாக 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அணையில் இருந்து மதகு வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. வைகை அணையின் முன்பு உள்ள 2 கரைகளையும் இணைக்கும் பூங்கா பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் அந்த வழியாக செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story